சசிகலா, தினகரன்… வைத்திலிங்கத்தை அடுத்தடுத்து சந்தித்தது ஏன்?

Published On:

| By vanangamudi

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து நேரில் சென்று சந்தித்துள்ளனர். sasikala assures vaithilingam contest

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிகாட்டில் வைத்திலிங்கம் வசித்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக வைத்திலிங்கம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தநிலையில், தெலுங்கன்குடிகாடு பகுதியில் தனது கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வைத்திலிங்கத்தை வீடு தேடிச்சென்று நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இஃப்தார் நோன்பு திறப்பதற்காக சென்ற சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரும் வைத்திலிங்கத்தை சந்தித்தனர். சசிகலாவை பார்த்ததும் மிகவும் எமோஷனலாகி கண் கலங்கினார் வைத்திலிங்கம்.

அவரை தேற்றி ஆறுதல் கூறிய சசிகலா, “எதுவும் கவலைப்படாதீங்க. 2026 எலெக்‌ஷன்லயும் ஒரத்தநாடு எம்.எல்.ஏ நீங்கதான். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவீர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உடல்நிலையை சரியாக பார்த்துக்கோங்க. இப்போதே உடல்நிலை மீது கவனம் செலுத்துங்கள். எலெக்‌ஷன் வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க. நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நாம எல்லோரும் நல்லா இருப்போம்” என்று தெம்பாக பேசியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்தை நலம் விசாரிப்பதற்காக வந்தேன். இந்த சந்திப்பில் அரசியல் உள்பட அனைத்து விஷயங்களும் பேசப்பட்டது. அதிமுக என்ற இயக்கம் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. அதனால் 2026-ஆம் ஆண்டு அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதா வழியில் ஒரு நல்ல ஆட்சியை நாங்கள் கொடுப்போம்.

அதிமுகவை சுக்குநூறாக உடைத்து விடலாம் என்று சிலர் நினைக்கலாம். அவர்களது பேச்சு கடலில் உள்ள தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து விடுவோம் என்று சொல்வது போல இருக்கிறது” என்றார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து, “இது ஒருவர் முடிவு செய்யும் விஷயமே இல்லை. அதிமுக சட்டதிட்ட விதிகளின் படி அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அது தான் நடக்கும்” என்று தெரிவித்தார். sasikala assures vaithilingam contest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share