ராஜ ராஜ சோழன் யார்? பெரிய பழுவேட்டரையர் பஞ்ச்!

அரசியல்

“ராஜ ராஜ சோழன்‌ எந்த மதத்தைச்‌ சார்ந்தவர்‌ என்று விவாதிக்காமல்‌, அந்த சோழ மாமன்னனின்‌ புகழை உலகின்‌ எட்டுத்திக்கும்‌ எடுத்துச்‌ சென்றால் சிறப்பாக இருக்கும்‌.” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜ ராஜ சோழனை படத்தில் இந்து மன்னராக மணிரத்னம் காட்டி உள்ளார் என சிலர் பேசத் தொடங்கியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் திருமாவளவனின் மணிவிழாவில், ”திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக சித்தரிப்பது போன்றவை நடைபெற்று வருகின்றன.” என்று வெற்றிமாறன் கூறியிருந்தார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஆதரவாக கருணாஸ், சீமான், கமல் உள்ளிட்டோர் பேசியுள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த எச். ராஜா, குஷ்பு உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”மாமன்னன்‌ ராஜ ராஜ சோழன்‌ இந்துவா? சைவமா? வைணவமா? சைவம்‌ இந்து மதமா? என பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

sarthkumar on raja raja cholan religion controversy

சிவன்‌, விஷ்ணு, சக்தி, முருகன்‌, சூரியன்‌, விநாயகர்‌ ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி .பி. 8 – ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆதிசங்கரர்‌ சைவம்‌, வைணவம்‌, சாக்தம்‌, கெளமாரம்‌, செளரம்‌, கணாபத்தயம்‌, ஸ்மார்த்தம்‌ என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச்‌ சட்டப்படி சைவம்‌, வைணவம்‌, சமணம்‌, பெளத்தம்‌, சீக்கியம்‌ மற்றும்‌ அனைத்து நாட்டுப்புற சமயங்களையும்‌ உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம்‌ என வரையறுத்துள்ளது.

1790 – ஆம்‌ ஆண்டுகளில்‌ ஆங்கிலேயர்கள்‌ சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம்‌, இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும்‌ பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் இருந்து மருவிய இந்து என்ற பெயரிடப்பட்டது.

என்ன சாதிக்க போகிறோம்‌?

குரங்கிலிருந்து வந்தவன்‌ மனிதன்‌, மனித குரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால்‌, விலங்‌கினத்திற்கு மனிதன்‌ என பெயரிட்டது யார்‌?

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன்‌ என சொல்வோமா? இந்த சர்ச்சைகள்‌ எல்லாம்‌ நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?

கிறிஸ்தவம்‌ எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள்‌ என்ற பெயர்‌ எப்போது வந்தது? இஸ்லாம்‌ எப்போது உருவானது? இஸ்லாமியர்கள்‌ என்ற பெயர்‌ எப்போது வந்தது?

தேசம்‌ முதலில்‌ வந்ததா? இங்கு வசிக்கும்‌ மக்கள்‌ முதலில்‌ வந்தார்களா? தமிழ்நாடு முதலில்‌ வந்ததா? தமிழர்கள்‌ முதலில்‌ இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்‌ மாற்றி விட்டோம்‌, ஆனால்‌, இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்‌?

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்‌?

யார்‌ முதலில்‌ வந்தார்கள்‌? எது முதலில்‌ வந்தது? என்பதை வைத்து பின்னாளில்‌ மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு – வளர்ச்‌சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ்‌ என்றிருந்த மனித இனத்தை இன்றும்‌ அவ்வாறு அழைக்கிறோமா?

sarthkumar on raja raja cholan religion controversy

சைவ சமயம்‌ இருந்தது உண்மை. வைணவ சமயம்‌ இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில்‌ இணைத்தது உண்மை எனும்‌ போது இதற்கு மேல்‌ என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்‌?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர்‌ நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன்‌
செயல்படும்‌ நாட்டில்‌, தொடர்ந்து சர்ச்சைகள்‌ எழுவது வேதனைக்குரியது.

பின்னோக்கி செல்வது நியாயமா?

மனித இனத்தின்‌ அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்‌, சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம்‌, பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்‌, தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும்‌ சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது?

புவி வெப்பமயமாதல்‌, காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த்‌ தொற்று பரவல்‌, புதுப்புது வைரஸ்‌ தாக்கம்‌, சமூக சீர்கேடுகள்‌ என தேசத்தில்‌ நடந்தேறும்‌ நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

மக்கள்‌ நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில்‌ நேரத்தை செலவிடாமல்‌, பின்னோக்கி சென்று வரலாற்றில்‌ சாதித்த மன்னர்களின்‌ புகழை ஆராயாமல்‌ சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும்‌ மீண்டும்‌ பேச சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

விலங்கினமாக இருந்‌த இனம்‌ _ இரு கற்களை உரசி தீப்பொறி உருவாக்குவதை கண்டுபிடித்ததில்‌ இருந்து, சக்கரங்கள்‌, உலோகங்கள்‌ என அன்றாட கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும்‌ மிகவும்‌ ஆச்சரியமூட்டும்‌ வகையில் நீண்டு செல்கிறது.

அபரிமிதமான அறிவியல்‌ வளர்ச்சியால்‌ ஆலிஸ்‌ என பெயரிடப்பட்ட உலகின் முதல்‌ மின்சார பயணிகள்‌ விமானம்‌ வெற்றிகரமாக வானில்‌ பறந்துள்ளது.

sarthkumar on raja raja cholan religion controversy

மாமன்னன் புகழை எடுத்துச் செல்வோம்!

நாளைய மனிதன்‌ விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும்‌ போது, செவ்வாய்‌ கோள்களில்‌ குடியேற சிந்திக்கும்‌ போது, ராஜ ராஜ சோழன்‌ எந்த மதத்தைச்‌ சார்ந்தவர்‌ என்று விவாதிக்காமல்‌, உலக அதிசயங்களுள்‌ ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும்‌ புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன்‌, வீரத்‌ தமிழன்‌ ராஜ ராஜ சோழனின்‌ புகழை உலகின்‌ எட்டுத்திக்கும்‌ எடுத்துச்‌ செல்வதில்‌ இந்த ஆர்வம்‌ இருந்தால்‌ சிறப்பாக இருக்கும்‌.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்துக்களை திரும்பப் பெறலாமா? உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஓலா, ஊபரின் கட்டணக் கொள்ளை… ஆப்பு வைத்த கர்நாடக அரசு!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *