கடந்த 2007-ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை துவங்கிய சரத்குமார், தனது கட்சியை தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவுடன் இன்று (மார்ச் 12) இணைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், பத்திரிகையாளர்களும், இயக்கத்தின் சகோதரர்களும் பிற கட்சியை சேர்ந்தவர்களும் எத்தனை தொகுதிகளில் நிற்க போகிறீர்கள்? யாருடன் கூட்டணி? என்ற கேள்விகளை தான் கேட்கிறார்கள். இது என் மனதை ஒவ்வொரு நாளும் தாக்கிக் கொண்டிருந்தது.
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று டிமாண்ட் வைப்பது மட்டும் தானா அரசியல்? மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நாம் எடுத்துக்கொண்ட பாதை, அடிபட்டுபோகிறதே, நாமும் அந்த வழியில் தான் செல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
நம் வலிமையெல்லாம் ஏன் ஒரு வலிமையான தலைவர் மோடிக்கு அர்ப்பணித்து அவருடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற கேள்வி என் மனதில் இரவில் தோன்றியது.
அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி இதுகுறித்து பேசினேன். அப்போது ‘நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன்’ என்று கூறினார்.
நாம் முடிவெடுத்துவிட்டோம், ஆனால் நாங்கள் வரவேற்க மாட்டோம் என்று பாஜக சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கேள்விகளும் எழுந்தது.
இரவு இரண்டு மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு போன் செய்து, ‘இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் இது சாத்தியமா?’ என்று கேட்டேன். ‘சாத்தியம் தான்…நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா?’ என்று கேட்டார்.
‘நான் முடிவெடுத்துவிட்டேன், சமத்துவ மக்கள் கட்சி இயக்கத்தின் நிர்வாகிகளை காலை சந்தித்துவிட்டு சொல்கிறேன். அவர்கள் நிச்சயமாக என் கருத்தை வலுப்படுத்துவார்கள். என்னை தாண்டி என் கருத்துக்களை தாண்டி மாற்று கருத்தை தெரிவிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று கூறினேன்.
ஏற்கனவே நாங்கள் பாஜகவுடன் தான் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இன்று பெருமையுடன் கூறுகிறேன் இது ஒரு சிறந்த வழி மக்கள் பணியை நாம் தொடர வேண்டும்.
இந்த பயணம் சமத்துவ மக்கள் கட்சியின் முடிவல்ல, இது மக்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சி. இது ஒரு எழுச்சியின் தொடக்கம்.
ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, நாட்டின் பிரதமாராகியிருக்கிறார் என்று சொன்னால், சிந்தித்து பார்க்க வேண்டும். கடுமையான உழைப்பு, உறுதி, நேர்மை.
பெருந்தலைவர் காமராஜரை போல் ஒரு ஆட்சி வராதா என்று நாம் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தபோது, அப்படிப்பட்ட ஆட்சியை தருவதற்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அது மோடி தான்.
நமது இயக்கம் மீண்டும் அடுத்த தேர்தலை சந்தித்து, தொடர்ந்து தேர்தலை சந்தித்துக்கொண்டே போவதற்கு பதிலாக, ஏன் நம்முடைய சக்தியை மற்றொரு சக்தியுடன் இணைத்து செயல்பட்டால் என்ன எண்ணம் எனக்கு வந்ததன் அடிப்படையில் தான், இன்று உங்களையெல்லாம் சந்தித்து உங்களின் பேராதரவுடன் அவர்கள் அதை ஏற்றுகொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் ஒற்றுமைக்காக, பொருளாதார வளர்ச்சிக்காக, வருங்கால இளைஞர்களின் நன்மைக்காக இந்த்க முடிவை எடுத்துள்ளேன்” என்று சரத்குமார் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: CSK-வின் கேப்டன் ஆகிறாரா ரோகித் சர்மா?
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்