நடிகர் விஜய் மட்டுமல்ல அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் இன்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “நாடாளுமன்ற தேர்தல் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. எங்களுடைய இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். கட்சி பலமாக உள்ளது.
அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகம் தளைக்க வேண்டுமென்றால் ஓட்டு போட பணம் கொடுக்க கூடாது. வாக்களிக்க பணம் பெற கூடாது என்று மக்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.
மக்கள் எங்களை திரும்பி பார்க்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் பயணித்து கொண்டிருக்கிறோம். காமராஜரை மோடி பின்பற்றுகிறார் என்றால் தவறில்லை. நடிகர் விஜய் மட்டுமல்ல அனைத்து மக்களும் அரசியலுக்கு வரலாம். நான் முதல்வராவதை விட என் இயக்கத்தின் சகோதரர்கள் முதலமைச்சராக வேண்டும் என்பது தான் எனது நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதல்வர் திறந்து வைத்தார்!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற தமிழக வீரர்!