நடிகர் சந்தானம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் மாடியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில்,“ஊருக்குள்ள சாமி இல்லன்னு சொல்லிட்டு இருந்த ராமசாமி நீ தான? ” என ஒருவர் கேட்க, அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்லை” என தந்தை பெரியாரைக் குறிப்பிடுவதுபோல் வசனம் பேசி பதிவிட்டிருந்தார்.
இந்த வசனம் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனமாகும்.
இதனைக் கண்ட பலர், சந்தானத்தைக் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகளை கண்ட உடன் அந்த பதிவை சந்தானம் நீக்கினார்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புரோமோஷனுக்காகத் தான் சந்தானம் இந்த வீடியோவை பதிவிட்டார் என்று அவருடைய ரசிகர்கள் ஆதரவுக் குரல் கொடுத்தனர்.
ஆனால், ஒரு திரைப்படத்திற்காக பெரியாரை அவமரியாதை செய்வது நியாயமில்லை என்று சந்தானத்துக்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தந்தை பெரியாரை குறிப்பிடுவதைப் போல வசனம் பேசி சந்தானம் சிக்கலில் சிக்கியுள்ளார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…