டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து நேற்று (ஏப்ரல் 3) இரவு திகார் சிறையில் இருந்து சஞ்சய் சிங் வெளியே வந்தார். அப்போது சிறைக்கு வெளியே குவிந்திருந்த ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் சஞ்சய் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், “ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் போராட்டத்திற்கு தயாராக உள்ளனர்.
எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்றாவது ஒரு நாள் இந்தச் சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அவர்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது கொண்டாட்டத்திற்கான நேரமல்ல, போருக்கான நேரம். எங்களுக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இருக்கிறது.
மக்களிடம் நாங்கள் செல்வோம். நாடாளுமன்ற தேர்தலில் சர்வாதிகார பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற கடுமையாக உழைப்போம். தங்கள் வாக்குகள் மூலம் டெல்லி மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்த அரசாங்கத்தின் முன் நாங்கள் தலை குனியவோ, பயப்படவோ போவதில்லை” என்று தெரிவித்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சஞ்சய் சிங் சந்தித்தார். தொடர்ந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினரையும் சஞ்சய் சிங் சந்திக்க உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: காதைக் குடைந்துகொண்டே இருக்கிறீர்களா… கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்!