ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த சாவர்க்கர் பேரன்!
ராகுல் காந்தியின் பேச்சுக்காக எப்ஐஆர் பதிவு செய்யப் போவதாக சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் இன்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக ராகுல்காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த 25ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “என் பெயர் சாவர்க்கர் அல்ல, என் பெயர் காந்தி, காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை.” என்று ராகுல்காந்தி கூறியிருந்தார்.
இதற்கு சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்காக எப்ஐஆர் பதிவு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், “உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் தனிப்பட்ட முறையில் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க இருவரும் கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “தாக்கரே முன்பு முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் சாவர்க்கருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாக்கரேவிடம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால் எனது கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது கருத்துக்காக கடந்த காலங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
“சட்ட விதிகளின் படி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு”: தலைமை கழகம்!
ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக