சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ்தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ’மோடி’ பெயரை பயன்படுத்தி பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் கடந்த 23 ம் தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல்காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த 25 ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “என் பெயர் சாவர்க்கர் அல்ல, என் பெயர் காந்தி, காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை” என்று ராகுல்காந்தி கூறினார்.
எப்ஐஆர் பதிவு செய்வேன்
இதற்கு சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்த அவர்,
“சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் இருவரும், ராகுல்காந்தியை மன்னிப்பு கேட்க கோர வேண்டும். சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சாவர்க்கரைப் பற்றி பேசியிருக்க கூடாது
இதனையடுத்து உத்தவ் தாக்கரே அணியில் உள்ள மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
“சாவர்க்கரைப் பற்றி ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மீது எங்களுக்கு மரியாதை உண்டு.
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் இதுபற்றி தெரிவித்துள்ளோம். சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதால் கார்கே அழைத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு இன்று நாங்கள் செல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் “விரிசல்களை” உருவாக்கும்
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 28) உத்தவ் தாக்கரே பேசுகையில், “வீர் சாவர்க்கர் எங்கள் கடவுள். அவருக்கு அவமரியாதை செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாவர்க்கரை இழிவுபடுத்துவது எதிர்க்கட்சி கூட்டணியில் “விரிசல்களை” உருவாக்கும்” என்று எச்சரித்தார்.
ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சித் தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த சாவர்க்கர் பேரன்!
”அவர் பாராட்டியதே இந்தளவுக்கு உயர காரணம்”: சச்சின்