டெல்லி ஆணையராகப் பொறுப்பேற்றார் சஞ்சய் அரோரா
டெல்லி காவல் ஆணையராகச் சஞ்சய் அரோரா இன்று (ஆகஸ்ட் 1) பொறுப்பேற்றுக்கொண்டார்.
டெல்லி காவல் ஆணையராக இருந்த ராகேஷ் அஸ்தானாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி 1988ல் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாக பணியாற்றிய சஞ்சய் அரோராவை டெல்லி ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 1988-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அரோரா ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
57 வயதான இவர், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையின் ஒரு பகுதியாக பணியாற்றியவர். சந்தன கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும், சிறப்பு அதிரடி குழுவிலும் பணியாற்றினார்.
வீரப்பன் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைக்காக வீரச் செயலுக்கான முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையிலும் (பிஎஸ்எஃப்) அரோரா பணியாற்றியுள்ளார்.
1997 – 2022 வரை மத்திய அரசின் அயல்பணியில் ஐடிபிபியின் கமாண்டன்ட்டாகவும், 2002 முதல் 2004 வரை கோவை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது இந்திய – திபெத் எல்லைக் காவல் படையின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்த நிலையில் டெல்லியின் 25ஆவது காவல் ஆணையராக அவரை உள்துறை அமைச்சகம் நேற்று நியமித்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) அவர் டெல்லி காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரியா