இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் தனது கையால் காலணியை எடுத்து கொடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று (டிசம்பர் 16) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உடனிருந்தார்.

ஆய்வை முடித்துவிட்டு ஆணையர் குமரகுருபரன் காரில் ஏறி செல்ல முயன்றபோது, தூய்மை பணியாளர் ஒருவர் அவரது காலணியை தனது கையால் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்.
இந்த நிகழ்வு பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ஆணையரின் செயல்பாட்டை பலரும் கண்டித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனைப்போல கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட வேண்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு அவரது உதவியாளர்கள் தங்களது கைகளால் ஷூ மாட்டி விட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் தற்போது சமூக வலைதளங்களில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக நீதி பேசும் திமுக-வில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வியப்பளிக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
தீரன் பட பாணி: வட இந்தியாவில் கெத்து காட்டிய தமிழக போலீஸ்!
நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!