பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மூன்று மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் ராய் ரத்தோர், “நேற்று (ஜூலை 5) மாலை 7.15 மணிக்கு பெரம்பூர் வேணுகோபால் சாமிகோவில் தெருவை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர்.
அந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பாக இறந்தவரின் சகோதார் வீரமணி என்பவரின் புகாரின் பேரில் செம்பியம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா மற்றும் கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி மூன்று மணி நேரத்திற்குள் எட்டு குற்றவாளிகளை புண்ணை பாலு, திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு, சந்தோஷ், அருள் மற்றும் செல்வராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மேற்படி நபர்கள் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல் கனி ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்தனர். அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும், முக்கிய இடங்களில் தேவையான பந்தோபஸ்து மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
இறுதிப் பட்டியல் தயார்… இனிமேல் கோவை மேயராக வரப் போகிறவர் யார்?
“சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல” : திருமா, செல்வப்பெருந்தகை பேட்டி!