சந்தனக் கட்டை கடத்தல்: வனத்துறை அமைச்சர் மகளுக்கு சம்மன்!

அரசியல்

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்து ஆயில் எடுத்த விவகாரத்தில் புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், தேனீ பண்ணை வைத்துள்ளார்.

இந்தப் பண்ணையில் சேலம் வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி ரெய்டு நடத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் வைத்திருந்த ஆறு டன் சந்தன மரக்கட்டைகள் மற்றும் சந்தன சீவல்களை பறிமுதல் செய்து அப்பண்ணைக்கு சீல் வைத்தனர்.

சந்தன ஆயில் எடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி வனத்துறையினர் அனுமதி கொடுக்காத நிலையில், பல வருடங்களாக உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர். வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் அதிகாரத்தை பயன்படுத்தி, புதுச்சேரி வனத்துறை வாகனத்தில் கேரளாவிலிருந்து சந்தன மரங்களை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மின்னம்பலத்தில், ‘சந்தனக் கடத்தல் விவகாரம்…பறிபோகும் வனத்துறை அமைச்சர் பதவி…கைதாகும் மகள்! என்ற தலைப்பில் கடந்த ஜூன் 15ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், சந்தனக் கடத்தல் விவகாரம் குறித்து விசாரித்து வரும் சேலம் வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.

அவர்கள் கூறுகையில், “அந்த கம்பெனியின் இணைய முகவரியில் இருக்கும் தொலைபேசி எண்ணுக்கு  போன் செய்தால் மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஒருவர் பேசுகிறார்.

அவரிடம் கம்பெனி பற்றி கேட்டால்… “நோ நோ இது ராங் நம்பர்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அந்த கம்பெனி பெயரே போலியாக உள்ளது.

சந்தன ஆயில் கம்பெனி நடத்த இடத்தின் உரிமையாளர் ஆஷாவுக்கு, ‘உரிய ஆவணங்களை எடுத்துவரச்சொல்லி’ சம்மன் அனுப்பியிருக்கிறோம்.

ஆனால், அவர்கள் நிச்சயமாக வரமாட்டார்கள். காரணம், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்காது. எனினும் தொடர்ந்து விசாரணை செய்து யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.

மேலும் அவர்கள், “உண்மையிலேயே புதுச்சேரி வனத்துறைதான் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்” என்கிறார்கள்.

புதுச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “வனத்துறை அமைச்சராக இருக்கும் தேனீ ஜெயக்குமாரின் மகளை எங்களால் விசாரிக்க முடியுமா?

வனத்துறை வாகனத்தில் சந்தன மரம் கடத்தி வரப்பட்டிருக்கும் நிலையில், வாகனம் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடி இருக்கிறது என்பது பற்றி ட்ரிப் ஷீட் கேட்டு விசாரணையில் இறங்கியுள்ளோம்” என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவருமான நாராயணசாமி இன்று (ஜூன் 17) பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “சட்டத்திற்கு புறம்பாக சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்து ஆயில் எடுத்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். .

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் சந்தன ஆயில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “ அந்த இடத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருப்பதாக கருதுகிறேன்,

இடத்தை வாடகைக்கு விடுபவர், அங்கே என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்து கண்காணிப்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது,

தமிழ்நாடு அரசு கண்டுபிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். குற்றவாளிகள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு புதுச்சேரி வனத்துறை அமைச்சரிடமோ அல்லது அவரது மகளிடமோ விசாரணை செய்தால் ஆட்சிக்கு பெரிய கலகம் ஏற்படும்.

அதனால் முன்கூட்டியே வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள் முதல்வர் அலுவலகத்தில் உள்ளவர்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருப்பதியில் தல அஜித் தரிசனம்… ரசிகர் கொடுத்த கிஃப்ட்!

ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “சந்தனக் கட்டை கடத்தல்: வனத்துறை அமைச்சர் மகளுக்கு சம்மன்!

  1. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுனு தாம் தூம்னு குதிக்கறவங்கள யாராச்சும் பாத்திங்க…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *