சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய 6 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அபராதம் விதித்துள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் எடுக்க தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில் சட்டவிரோதமாக, ஆயிரக்கணக்கான கோடிக்கு மணல் எடுக்கப்பட்டதால் அந்த பகுதி தன்னார்வலர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2012 – 2013 வரை அதிகளவிலான தாது மணல் எடுக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.
இந்த தாது மணல் கொள்ளை தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவது குறித்து வருவாய்துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை குழு அமைத்தார்.
உடனடியாக ககன்தீப் சிங் பேடி, அவருக்கு கீழ் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், டிஆர்ஓ (மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி) 10 பேர், துணை ஆட்சியர்கள் 20 பேர், சுரங்கத் துறை, சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள், ஏடி சர்வேயர்கள், வருவாய்த் துறை ஆய்வாளர், விஏஓ என சுமார் 250 பேரை 25 குழுக்களாக பிரித்தார். அவர்கள் தாது மணல் எடுக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, சிவில் இன்ஜினியரிங் படித்தவர். இந்த அனுபவத்தால் மணல் எடுக்கப்பட்ட ஆழமான இடங்களிலும் இறங்கியும், பல கிலோ மீட்டர் நடந்து சென்றும் டேப் வைத்து இஞ்ச் பை இஞ்ச்சாக அளந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு சுமார் 110 நாட்கள் நடந்தது. இதன் ஆய்வறிக்கையை தொகுத்து, கொள்ளையடிக்கப்பட்ட மணல் விவரம், அதனுடைய அன்றைய மதிப்பு, எந்தெந்த நிறுவனங்கள் கொள்ளையில் ஈடுபட்டன உள்ளிட்ட விவரங்களுடன் முதல்வர் முன் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கீரைகரந்தட்டில் உள்ள விவி மினரல்ஸ்,
தூத்துக்குடி மாவட்டம் குட்டுடங்காடு கிராமத்தில் விமான நிலையம் எதிரில் பாளையம்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள டிரான்ஸ்வோர்ல்டு கேமட் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
சென்னை, எழும்பூரைச் சேர்ந்த பீச் மினரல்ஸ்,
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் -1, ஹார்பர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள, இண்டஸ்ட்ரியல் மினரல் கம்பெனி,
தூத்துக்குடி மாவட்டம், புதுகிராமம் பாளையம்கோட்டை சாலை, மாணிக்கம் மினரல்ஸ்
தூத்துக்குடி மாவட்டம், புதுகிராமம், பாளையம் கோட்ட சாலையில் உள்ள இந்தியன் ஓசன் கார்னெட் மணல் கம்பெனி ஆகிய 6 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிறுவனங்கள் கோடி கணக்கில் தாது மணலை சட்டவிரோதமாக எடுத்துள்ளன. இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதன் மூலம் சுமார் 5,800 கோடி இந்நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு கடந்த டிசம்பரில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நோட்டீஸ் அனுப்பின.
ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
இதனால் மேற்குறிப்பிட்ட 6 நிறுவனங்களுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ, 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட காலத்தில், மூன்று மாவட்டங்களில் மட்டும் இவ்வளவு தாது மணல் கொள்ளை நடந்திருக்கிறது என்றால் மற்ற மாவட்டங்களில் எவ்வளவு கொள்ளை போயிருக்கும். எனவே மற்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.