வைஃபை ஆன் செய்ததும் செப்டம்பர் 16ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடந்த போட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. இப்போது வரை இந்த நாடாளுமன்ற கூட்டத்துடன் அஜெண்டா என்ன என்பது பற்றிய தெளிவான அறிவிப்புகள் எதுவும் இல்லை. இந்த சிறப்புத் தொடரில் கேள்வி நேரம் இல்லை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்பாகவும் கட்சிகள் தங்கள் எம்பிக்களை கூட்டி அந்தக் கூட்டத் தொடரில் கையாளப்போகும் வியூகங்கள் குறித்து விவாதிப்பது வழக்கம் தான். அந்த வகையில் திமுக எம்பிக் களின் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்சினையான காவிரி நீர் விவகாரம், தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமை, விஸ்வகர்மா திட்டம் எதிர்ப்பு, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் அனைத்து எம்.பி.க்களும் கட்டாயமாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கிற சூழல் ஏற்பட்டால் திமுகவின் நிலைப்பாட்டை உறுதியாக ஓட்டளிப்பதில் காட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின். எனினும் வருகிற மக்களவை கூட்டத் தொடரில் சனாதனம் பற்றிய பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பு திமுக மக்களவை, மாநிலங்களவை நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செப்டம்பர் 14ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி சனாதனம் பற்றி வெளிப்படையாக பேசினார். ‘இந்தியா கூட்டணி சனாதனத்துக்கு எதிராக இருக்கிறது. சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் திமுகவின் உதயநிதி பேசிய பேச்சை ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கும் எதிராக அரசியல் ரீதியாக நகர்த்திச் சென்றார் மோடி.
இத்தகைய அரசியல் சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் சனாதனம் பற்றிய விவகாரம் வந்தால் என்ன செய்வது என்ற ஆலோசனை எம்பிகள் கூட்டத்துக்கு முன்பே ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்தது.
ஏற்கனவே திமுகவின் சீனியர்களான பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர், ‘இந்த விவகாரத்தில் இங்கே நாம் பேசுவது வட இந்தியாவில் இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று நமது நண்பர்களே கூறுகிறார்கள். எனவே அடுத்தடுத்து இதை நாம் பக்குவமாக கையாள வேண்டும்’ என்று ஸ்டாலினிடம் தெரிவித்து இருந்தார்கள்.
இதன்படியே நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக சனாதனம் பற்றிய உதயநிதியின் கருத்து சர்ச்சைகளை கிளப்பினால்… அவற்றுக்கு உரிய விளக்கம் அதாவது நாங்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளை தான் எதிர்த்தோமே தவிர இந்து மதத்தை எதிர்க்கவில்லை என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும்… நாமாக முன்வந்து சனாதனம் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம் என்றும் மக்களவை, மாநிலங்களவை திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
திமுக இதுகுறித்து போதுமான விளக்கம் தெரிவித்துவிட்ட பிறகும் பாஜக சனாதன விவகாரத்தை இந்தியா கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் பயன்படுத்தி வருவதால் அவர்கள் நாடாளுமன்றத்தில் வீசும் வலையில் திமுக சிக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் எம்பிக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
இந்தியா – இலங்கை இறுதிப்போட்டி: முழு விவரம் இதோ!
திமுக முப்பெரும் விழா: வேலூர் சென்றார் முதல்வர்