தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துகள் இந்தியா முழுதும் சர்ச்சையாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இதுகுறித்து இன்று (செப்டம்பர் 4) அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், ‘இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுகவின் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். காங்கிரஸின் நிலைப்பாடு இதில் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கே.சி. வேணுகோபால், “எங்கள் பார்வை மிகவும் தெளிவானது. ‘சர்வ தர்மா சம பவ’ அதாவது எல்லா மதங்களும் எங்களுக்கு சமமே.
அதேநேரம் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை கூறுவது அவரவர் சுதந்திரம்.
காங்கிரஸ் கட்சி எல்லாருடைய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கிறது” என்று கூறியிருக்கிறார் வேணுகோபால்.
உதயநிதி, ‘சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதன் மூலம் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டார். திமுகவை தன்னோடு கூட்டணியில் வைத்திருக்கும் காங்கிரஸும் இந்தியா கூட்டணி கட்சிகளும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது.
மேலும் வட இந்தியாவின் பல்வேறு பாஜக தலைவர்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து, இதை அங்கே தேர்தல் பிரச்சினையாக மாற்றி வருகின்றனர்.
அதேநேரம் உதயநிதியின் சனாதனம் பற்றிய கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரே மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஆச்சார்ய பிரமோத் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “ஹிந்துக்களை புண்படுத்துவதிலும் கொச்சைப்படுத்திவதிலும் தற்போது தலைவர்களுக்கு இடையே போட்டி நடக்கிறது.
சனாதன தர்மத்தை அழிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளாக முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ரஷித் ஆல்வி, “நமது அரசியலமைப்பு சாசனம் மதச்சார்பற்றது. பல்வேறு பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அனைத்து மதங்களையும் இனங்களையும் மதிக்கும் நாடுதான் இந்தியா.
ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாஜக மதத்தை அரசியலாக்கிவிட்டது. இதனால்தான் இப்போது பலரும் மதம் பற்றி கருத்து கூற காரணமாகியிருக்கிறது.
அவர் (உதயநிதி) அப்படி சொன்னது தவறுதான். ஆனால், மதத்தை அரசியல் மயமாக்கியதற்காக பாஜக தலைவர்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில்தான், அதிகாரபூர்வமாக ‘சர்வ தர்மா சம பவா’ என்று கூறியிருக்கிறார் காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்.
சர்வ தர்ம சம பவ என்பது மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட ஒரு சொற்றொடராகும். அனைத்து மதங்களும் சமமே என்பதுதான் இதன் அர்த்தம்.
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உருவாகத் தொடங்கிய பிளவுகளைத் தணிக்க, 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாத்மா காந்தி இந்த சொற்றொடரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
–வேந்தன்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் அதிரடி பதவி நீக்கம்!
பல்லடம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை… ஒருவர் கைது!
Comments are closed.