சனாதன LAW!?

Published On:

| By Minnambalam

ஸ்ரீராம் சர்மா

கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து இந்திய அரசியல் அரங்கில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தன.

‘உதயநிதி ஸ்டாலினை சிறைக்கு அனுப்புவோம். அவருக்கான சரியான இடம் சிறைதான். அவரை சிறைக்கு அனுப்ப எங்களால் முடிந்ததை செய்வோம்’ என ஆகாசத்தில் பாயாசம் காய்ச்சிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலின் வீடியோவைக் கண்டபோது சிரிப்புத்தான் வந்தது.

கடந்த 2022 டிசம்பர் 14ஆம் நாளில், “ஐயோ, காலிஸ்தான் என்னைக் கொல்லப் பார்க்கிறது“ என வெற்றுக் கூச்சல் போட்டவர்தான் இந்த பிரகிருதி என்பதால் அதைப் புறந்தள்ளிவிட்டு என் வேலையில் மும்முரமாக இருந்தேன்.

ஆனால், விஷயம் மேலும் சூடேறியது.

தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகனும் அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அதிகம் சொல்லிவிட்டார் என நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துவிட, அது குறித்து தீர ஆய்ந்திட முனைந்தேன்.

திராவிட சித்தாந்தவாதியாக அறியப்பட்டாலும், நானோர் ஆழங்காற்பட்ட இந்து என அறிவித்துக் கொள்வதில் எனக்கென்றும் தயக்கம் இருந்ததில்லை என்பதை எனது எழுத்தை தொடர்வோர் அறிவர்.

சரியெனப்பட்டதை பளிச்சென சொல்வது எனக்கான கடமையாகிறது. கொள்வோர் கொள்க!

***

ஏறத்தாழ 200 சதுர மில்லியன் பரப்பளவு கொண்டதான இந்த பூமிக் கோளத்தில் மனித இனம் உயிர்த்திருப்பது வெறும் 0.01 சதவிகிதம் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிவரம்!

ஆயினும், எஞ்சியுள்ள பரப்புகளில் வாழும் மீன், புழு, பூச்சி, பறவை, விலங்கினம் முதலான மற்ற மற்ற ஜீவராசிகளையெல்லாம் மனித இனமே இதுகாறும் அடைந்தாள விரும்பியிருக்கிறது. அதனால், அது கொண்டதும் இழந்ததும் அநேகம். அது தனிக் கதை.

***

மனித இனம் எழுந்து நான்கு பில்லியன் ஆண்டுகளாகின்றன என விக்கிப்பீடியா சொன்னாலும் கூட…

மனித இனமானது தன்னியல்பில் முற்றி நின்று சாதிக்க முனைந்தது என்னமோ சற்றேறக் குறைய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்.

அதன்பின், மண்ணாசை – பொன்னாசை – பெண்ணாசை எனப் பற்பலவற்றை முன்னிறுத்தி, தான் கண்ட வாழ்வையும் கோடிக்கணக்கான உயிர்களையும் ரத்தபலியாக கொண்டு தீர்த்தபின்…

‘ச்சீச்சீ… போதுமடா சாமி, இது போதும்’ என உன்னதமானதொரு வாழ்வியலை ‘ஆகமம்’ ஆக கண்டு நிலைநிறுத்திப் போனார்கள் நமது முன்னோர்கள்.

முன்னோர்கள் கண்டு நிலைநிறுத்திய அந்த ஆகமத்துக்குப் பெயர் அன்பு! பேரன்பு!

‘ஆ’ எனில் ஆன்மா ! ‘கமம்’ எனில் நிறைவு என்பதாம்!

ஆன்மாவின் நிறைவு அன்பு ஒன்றே என்றார்கள் முன்னோர்கள்!

அதுதான் சனாதனம்!

***

‘சனா’ எனும் சொல்லுக்கு தொன்மை அல்லது பழைமை என்பது பொருளாகும். சனா என்னும் அந்தச் சொல் சமஸ்கிருத சொல்லாக மட்டுமல்ல; கிரேக்க மற்றும் அரேபிய சொல்லாகவும் ஆகி நிற்கிறது.

ஆம், ஆபிரகாமிய மதத்தின் மூலவரது மனைவியாரின் பெயராக மட்டுமல்ல; புனித குர்ரானிலும் சனா என்னும் சொல் பழைமையுடையதாகவும் உன்னதமானதாகவும் காணக் கிடைக்கிறது.

‘தனம்’ எனும் சொல்லுக்கு சொத்து என்பது பொருளாகும்.

ஆக, ‘சனாதனம்’ என்பதற்கு ‘தொன்மையான சொத்து’ என்பதே கூட்டுப் பொருளாகிறது. அப்படியெனில், ஆன்றோர்கள் கண்டடைந்த பேரன்பின் வழிபட்ட வாழ்வியல் நெறியினைக்தான்  சனாதனம் என்பதாகக் கொள்ள முடிகிறது!

சனாதனம் எனுமந்த சூட்சுமச் சொல்லாடலுக்குள் அன்றந்த நாளில் குருக்ஷேத்திர மண்ணில் கீதையுரைத்த கிருஷ்ணரும் – அதற்கு முன்பான ரிஷிகளும் முனிகளும் – தென்னாட்டு சித்த புருஷர்களும் – சிலுவைப்பாடு கண்ட ஏசு பிரானும் – ஹீரா குகைக்குள் ஞானத்தவமிருந்து மறை இறக்கிய இஸ்லாத்தின் நபி பெருமகனாரும் – புத்தரும் – மகாவீரரும் ஒன்றிணைந்து போகிறார்கள் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது!

‘அன்பின் வழியது உயிர் நிலை’ என்றும் ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றும் ஓதியுரைத்த அறிவாசான் திருவள்ளுவரின் திருக்கூற்றுக்கு அது ஒத்திசைந்து போகிறது!

கொண்டு கொண்டேற்றிப் பார்த்தால்…

‘சனாதனம்’ எனும் வாழ்வியல் நெறியானது இந்த பூமியில் ஆகச் சிறந்த வாழ்வினைக் கண்ட பெருமகனார்கள் பல்லோராலும் – மனித நிம்மதியை மட்டுமே முன்வைத்துக் கண்டுரைக்கப்பட்ட அற்புதமான சாசனமாக  நிற்கிறது.

***

அன்பே சிவம் எனும் சித்த மரபில் ஊன்றித் திளைத்த தமிழர்களுக்கு பேரன்பின் வழிபட்ட ‘சனாதனம்’ என்பது புதிதல்ல.

அடிமை செய்ய வந்த ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர்தான் இந்தியா. சுதந்திர மண்ணில் அடிமைப் புத்தியை அகற்றி வாழ விரும்பும் நாம் இனி இந்த மண்ணை ‘பாரதம்’ என அழைப்போம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது!

கூடவே சில கேள்விகளையும் கேட்போம். அவர்கள் நல்லவர்கள் எனில் தயங்காது பதில் சொல்லியாக வேண்டும்.

***

HINDU LAW என்ன சொல்கிறது?

எவர் ஒருவர் இஸ்லாமியர் அல்லரோ, எவர் ஒருவர் கிறிஸ்துவர் அல்லரோ, எவர் ஒருவர் பார்ஸி அல்லரோ… அவரெல்லாம் இந்துக்கள் ஆவர் என்கிறது.

உங்கள் நியாயம் உள்ளார்ந்தது எனில், இந்து LAW என்பதை சனாதன LAW என மாற்றிவிடலாமே!

கூடவே, பள்ளிச் சான்றிதழ்களில் இனி சாதியை குறிப்பிடத் தேவையில்லை ‘சனாதனி’ எனக் குறிப்பிட்டுவிட்டால் போதும் எனவும் ஒரு சட்டத்தை இயற்றி விடுங்களேன்! செய்வீர்களா? ஒரே நாடு ; ஒரே தேர்தல் என்பது ஆகக் கூடும் எனில் – ஒரே அன்பு அது சனாதனப் பேரன்பு என்பதும் ஆகக் கூடும் அல்லவா? அப்படி ஆகி விட்டால் பின்பு இங்கே சாதியேது? மதமேது? மாச்சரியம்தான் ஏது?

அப்படி மாற்றி விடுவதன் வழியே இந்த நாடு பேரன்புக்கான நாடு என உலகப் பெயர் பெற்று விடுமே! துணிவீர்களா?

நாடெங்கும் வாழும் 140 கோடி மக்களும் ஏற்றத்தாழ்வின்றி பேரன்பு எனும் ஒரே சனாதன சாதியின் பாற்பட்டு ஆனந்த வாழ்வு கொண்டு அமரத்துவம் அடைந்து விடுவார்களே!

நல்லோரே, எனதிந்த எழுத்தை எள்ளலான எழுத்தாகக் கொள்ளாமல், வேதனையும் வலியும் சுமந்ததாகக் கொள்ள வேண்டுமாய் பணிந்து விழைந்தபடியே தொடர்கிறேன்…

***

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மரியாதைக்குரிய தலைவரான மோகன் பகவத் அவர்கள் அன்றொரு நாள் கவலைப்படப் பேசினார்…

“சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டோம். அவர்களைக் குறித்து நாம் கவலைப்படத் தவறிவிட்டோம்.”

பெரியவரின் பேச்சுக்கான பொருள் என்ன? அம்மவோ, முன்னோர்கள் கண்டு வைத்த பேரன்பு நிலையான சனாதனத்தை நாம் கைவிட்டு விட்டோமே என்பதுதானே?

அதைத்தானே உதயநிதி ஸ்டாலின் தன்னளவில் கேட்டார்.

சக மனிதனை அடக்கி சாணிப்பால் புகட்டுவதும், ஒடுக்கப்பட்டவன் முகத்தில் சிறுநீர் பீய்ச்சுவதும் மனிதக் கொடுமையல்லவா? அதற்குக் காரணமான சாதிப் படிநிலைகளைத் தட்டிக் கேட்டவரின் தலைக்கு பத்து கோடி விலை வைத்துக் கொக்கரிப்பது அநாகரிகத்தின் உச்சம் அல்லவா?

அன்றந்த குருக்ஷேத்திர பூமியில் இளையவன் அர்ஜுனன் பேசாத பேச்சா? மூத்தவரான கிருட்டிணர் பதினெட்டு அத்தியாயம் புகட்டி இளையவனைத் தேற்றியதை அந்த வடநாட்டு சாமியார் அறிய மாட்டாரா?

மெல்லச் சொல்லி மேம்படுவதை விட்டு விட்டு,  கொல்ல சொல்லி அதற்குப் பத்து கோடி விலையும் வைப்பதுதான் அன்பே வடிவான சனாதனத்துக்கான அழகா?

ஓ… எல்லை தாண்டி வந்து எங்கள் அமைச்சரைக் கொன்றுவிடுவாரா?

வீரம் செறிந்த தமிழ் மண்ணில் களமாடிய புறநானூற்றுத் தளவாடங்களை அறிந்திருந்தால் அப்படிப் பேசியிருப்பாரா? இந்த பார்பாரிய சிந்தனையை நாகரிக உலகம் கெக்கலிக்கொட்டி தூற்றாதா?

கல்யாண வீட்டில் இதுபோன்றதொரு ஜோடியை கண்டதில்லை என உயர்த்திப் பேசுவது வழக்கமல்லவா? அந்த சபை பேச்சை இனப் படுகொலை என்னும் அளவுக்கு இட்டுச் சென்றது சரிதானா?

“இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் நாடு கடத்தியாக வேண்டும். இல்லையென்றால் சரயு நதியில் ஜல சமாதியாகி விடுவேன்” என பாரதப் பிரதமர் மோடியையே மிரட்டி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்தானே இந்த சாமியார்?

இப்படியான சந்தர்ப்பப் போலிகளை உயர்ந்த தலைவர்கள் உன்னிப்போடு எச்சரித்தாக வேண்டுமல்லவா ?

எனது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என முதலமைச்சரே விளக்கமளித்த பிறகும் வளர்ந்து வரும் ஒரு இளந்தலைவரின் மீது நாடெங்கிலும் வழக்கு பதிவது வல்லாட்டமல்லவா?

அது, அரசியலுக்கு ஆகலாம், சமூக அமைதிக்கு வழி கோலுமா ?

***

மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சனாதனம் என்பது ஒரு மதமல்ல. அது பேரன்பின் பாற்பட்டதொரு வாழ்வியல் நெறியாகும்.

அந்தப் பேரன்பு நிலையினை கைக்கொள்ளும் யாவரும் சனாதனிகளே. அவர்கள் இந்துக்களாகவும் இருக்கலாம் என்பதே உண்மை.

குறித்துக்கொள்ளுங்கள்…

மானுடர்களின் ஆயுட்காலம் மிக மிகச் சொற்பமானது!

மதம் கடந்த ஆன்ற முன்னோர்களால் கண்டு நிலைநிறுத்தப்பட்ட பேரன்பின் வழிபட்ட சனாதனத்தின் ஆயுட்காலமோ எல்லையற்றது; நித்தியமானது.

அது, நீளுலகம் உள்ளவரை தன்னளவில் மீண்டெழுந்து நிற்கவே செய்யும்!

அந்தப் பேரன்பு நிலையினை உள்வாங்கிக் கொள்வது ஆட்சியாளர்களுக்கு அவசியமாகிறது.

வாழப் பிறந்ததுதான் பூமி! – இதில்

வல்லாட்ட வழக்கு எதற்கு சாமி!?  

கட்டுரையாளர் குறிப்பு:  

Anbazhagan statue and SriRam Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel