சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி மீது வழக்குத் தொடர ஆளுநர் விரைவில் அனுமதி தருவார் என்கிறார்கள் இன்று (செப்டம்பர் 7) அவரை சந்தித்து வந்த பாஜக நிர்வாகிகள்.
திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு, இந்தியா முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை வைத்தது. அவர் தற்போது அமைச்சராக இருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநரின் அனுமதி தேவை என்ற அடிப்படையில் தமிழக பாஜக மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் செப்டம்பர் 3 ஆம் தேதி ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், “அமைச்சர் உதயநிதி சனாதனத்தை தொற்று நோய்களோடு ஒப்பிட்டுப் பேசி இந்து மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டார். இரு பிரிவினரிடையே பிரச்சினை, கலவரம் வெடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இவ்வாறு பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி மீது ஐபிசி 153, 153 ஏ, 295, 295ஏ, 296, 298, 499,504, 505 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது. எனவே அமைச்சரான உதயநிதி மீது வழக்குத் தொடர குற்றவியல் நடைமுறை 197 இன்படி ஆளுநராகிய நீங்கள் அனுமதி வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் அஸ்வத்தாமன்.
இந்த நிலையில் தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன், துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், பால் கனகராஜ், தடா பெரியசாமி, நாச்சியப்பன் உள்ளிட்ட பாஜக குழுவினர் இன்று (செப்டம்பர் 7) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். சனாதன தர்மம் என்ற புத்தகத்தை ஆளுநருக்கு வழங்கிய அவர்கள், உதயநிதி தொடர்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தை நேரில் வழங்கினார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கரு. நாகராஜன், “சனாதனத்தை ஒழிப்போம் என்று உதயநிதி சொன்னால் இந்துக்களை ஒழிப்போம் என்றுதான் பொருள். இதுபோல் நஞ்சை விதைக்கும் கருத்துகளை பேசிய உதயநிதி அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எங்கள் மாநிலத் தலைவர் எழுதிய கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து வந்திருக்கிறோம்” என்றார்.
ஆளுநருடனான சந்திப்பின்போது என்ன நடந்தது என்று பாஜக குழுவினரில் சிலரிடம் பேசினோம். “சனாதனம் தொடர்பாக அப்டேட் ஆகவே இருக்கிறார் ஆளுநர். ‘சனாதனம் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் எல்லாம் அதுபற்றி விமர்சித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று எங்களிடம் தனது அதிருப்தியை பகிர்ந்துகொண்டார். நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடியே அமைச்சர்களிடம் சனாதன சர்ச்சைக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்தும் ஆளுநருக்கு அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார் ஆளுநர்.
அமைச்சர் உதயநிதி மீது வழக்குத் தொடர்வதற்கான ஒப்புதலை விரைவாக ஆளுநர் வழங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆளுநர் அனுமதி கொடுத்த பின் உதயநிதி மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வேகப்படுத்துவோம்” என்கிறார்கள் பாஜக புள்ளிகள்.
–வேந்தன்
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!