மக்கள் இதயத்தை சனாதனம் ஆள்கிறது: உதயநிதிக்கு அமித் ஷா பதில்!

அரசியல்

அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 2) சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சுக்கு இன்று (செப்டம்பர் 3) மத்திய உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா ராஜஸ்தானில் பதிலளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்… அம்மாநிலத்தில் பாஜகவின் ‘பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை’யின் இரண்டாவது கட்டத்தை துங்கர்பூரில் தொடங்கி வைத்தார் அமித் ஷா.
அப்போது உரையாற்றிய அமித் ஷா,
“எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக பண்டைய இந்திய பாரம்பரியத்தின் மதிப்பை குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. திமுக, காங்கிரஸ் தலைவர்கள் வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
சனாதன தர்மத்தின் மதிப்புகள் மற்றும் சாரத்தை அவர்கள் எப்போதுமே அவமதித்துதான் வந்திருக்கிறார்கள். இதற்கு முன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பட்ஜெட்டில் முதல் உரிமை சிறுபான்மையினருக்கானது என்று கூறியிருந்தார். ஆனால் பட்ஜெட்டில் முதல் உரிமை ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது என்று நாங்கள் கூறுகிறோம்.
மோடி வெற்றி பெற்றால் சனாதன ஆட்சி வரும் என்கிறார்கள். மக்கள் இதயத்தை சனாதனம் ஆள்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா இயங்கும் என்று மோடி கூறியிருக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள்” என்றும் அமித் ஷா பேசியிருக்கிறார்.
மேலும், “கடந்த ஐந்தாண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ஊழலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இந்த யாத்திரையின் முடிவு அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தின் முடிவைக் குறிக்கும்” என்றும் கூறினார் அமித் ஷா.

வேந்தன்

விமர்சனம் : பரம்பொருள்!

வாழ்வா சாவா ஆட்டத்தில் வங்காள தேசம்… வரிந்துகட்டும் ஆப்கானிஸ்தான்…

 

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *