சனாதன பேச்சு : உதயநிதிக்கு ஜாமீன் வழங்கிய பெங்களூரு கோர்ட்டு!
சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூருவில் உள்ள 42வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்று டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே பெங்களுரூவில் உள்ள 42வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பரமேஸ் உதயநிதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
சனாதன தர்மம் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் உதயநிதி கூறியிருக்கிறார். இது இந்து தர்மத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஆஜராக சொல்லி ஏற்கனவே பெங்களுரு நீதிமன்றம் இரண்டு முறை அனுப்பிய சம்மனுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஜூன் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்று உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 25) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் பிணைத்தொகை வழங்க நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”லாரா மட்டுமே எங்களை நம்பினார்“ : ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம்!
திருவாசகத்தைத் தொடர்ந்து திவ்ய பிரபந்தம்: இளையராஜாவின் இறை இசை!