Supreme Court displeasure on Udayanidhi
சனாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை காமராஜர் அரங்கத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா ஆகிய நோய்களோடு ஒப்பிட்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனால், தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பீகார், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, டெல்லி என பிற மாநிலங்களிலும் உதயநிதி மீது வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் தன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி தீபங்கர் தத்தா, “நீங்கள் பேசியதன் விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரிகிறதா? நீங்கள் சட்டப்பிரிவு 19(1)(a) , 25 ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டு, இப்போது பாதுகாப்பு கேட்டு வந்துள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.
இதற்கு வழக்கறிஞர் அபிஷேன் மனு சிங்வி, ”உதயநிதி ஸ்டாலின் பேசியதை நியாயப்படுத்தவில்லை. வழக்கை எதிர்கொள்ளமாட்டோம் என்று சொல்லவில்லை.
ஆறு மாநிலங்களில் எஃப்.ஐ.ஆர்கள் போடப்பட்டுள்ளது. அதை ஒரே வழக்காக இணைக்கத்தான் கோருகிறோம்” என்று வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி தீபங்கர் தத்தா, “நீங்கள் சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு அமைச்சர். அமைச்சராக பேசும் போது வரும் எதிர்விளைவுகளையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து அமிஷ் தேவ்கன், அர்னாப் கோஸ்வாமி, நூபுர் ஷர்மா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரின் வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,
இந்த வழக்குகளில் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.கள் ஒரு வழக்காக ஒருங்கிணைக்கப்பட்டன. அதே நிவாரணத்தைதான் நாங்களும் கேட்கிறோம் என்றார்.
இந்த வாதத்தை தொடர்ந்து, இந்த மனுவை பரிசீலிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். Supreme Court displeasure on Udayanidhi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிறுத்தை சிவா – சூர்யாவின் ‘கங்குவா’ டீசர் ரிலீஸ் எப்போது?
’ED முன்பு 12ஆம் தேதிக்கு பிறகு ஆஜராக தயார்.. ஆனால்’ : கெஜ்ரிவால்