சனாதன விவகாரத்தில் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 7) வாதம் முன்வைக்கப்பட்டது.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் தாக்கல் செய்த கோவாரண்டோ வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் சேகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி, “இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சனாதனம் இந்து மதம் என்பதை நான் மறுக்கிறேன். அன்பு காட்டுவது, சகோதரத்துவம், பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இந்துமத தர்மம். பரந்து விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்க முடியாது.
இந்து மதம் பழமையான மதம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் சனாதன தர்மத்தை ஏற்கவில்லை. சனாதனத்தை விலக்கினால் மட்டுமே இந்து மதத்தை மக்கள் ஏற்பார்கள். ஆரியர்களின் சட்டம் ஆரியர்களுக்கு தான், தமிழர்களுக்கு அல்ல. தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கெளரவப்படுத்தும் வகையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் பங்கேற்றேன்.
தீவிர ஐயப்ப பக்தரான நான் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒருபோதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி அனிதா சுமந்த் நாளைக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அங்கன்வாடியில் பயிலும் ஆட்சியரின் மகள்: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!