சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?  ஆளுநருக்கு 19 கேள்விகள்!

அரசியல்

சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன? அதை உருவாக்கியது அல்லது எழுதியது யார்? என்பது உள்ளிட்ட 19 கேள்விகளுக்கு ஆளுநர் என்.ரவி பதிலளிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கேட்டுள்ளார்.

சென்னையில்  நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம்.

சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம்.

ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்” என்றார். ஆன்மீகம் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி சில கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்

அதில்          

1. சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?

2. சனாதன கொள்கைகளுக்கான உரைகள் ஏதும் உள்ளதா அல்லது செவி வழி தகவல் மட்டும் தானா?

3. சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்?

4.  தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?

5. சனாதன தர்மத்தை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலோ பின்பற்றுகிறார்களா?

6. சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா?

7.  இந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?

8. 1964ல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா?

9. ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா?

10. இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா?

11. சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்துவிட்டார்களா?

12. உயிருடன் இருக்கின்றார்கள் என்றால் எங்கு வசிக்கிறார்கள்? அவர்களுடைய அன்றாட பணிகள் என்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?

13. ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா?

14.  மிகப்பெரிய தத்துவஞானியும், திராவிட இயக்கத்தின் நிறுவனருமான தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன்?

15. நான்கு வர்ணங்கள் உள்ளதாக கூறும் இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்?

16.  நீங்கள் சதுர் வர்ண தர்மத்தை பின்பற்றி, அதை கடைபிடிக்கிறீர்களா?

17. மற்ற மதங்களால் சதுர் வர்ண தர்மம் ஏன் பின்பற்றப்படவில்லை?

18 . தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?

19.  அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், அரசியலமைப்பு சட்டம் விலக்கு அளிக்காமல் உள்ள நிலையில், தன்னிச்சையாக (extempore speech) பேசுவது அரசியலமைப்புச் சட்ட மீறல் இல்லையா?

என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 19 கேள்விகளை அனுப்பியுள்ள வழக்கறிஞர் துரைசாமி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் இதற்கு பதிலளிக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் டெல்லியில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார்.

மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது” என்று பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி தொடர்ந்து இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மீண்டும் சனாதன தர்மத்தை பின்பற்றவேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கலை.ரா

திருக்குறளின் ஆன்மாவை பறித்துவிட்டார் ஜி.யு.போப்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

2 thoughts on “சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?  ஆளுநருக்கு 19 கேள்விகள்!

  1. ஆன்மா என்ற ஜாதி முறையைக் குறிக்கும் எந்த பதிவும் திருக்குறலில் கிடையாது, என்பதால் R.N..ரவி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

  2. ஆன்மா என்ற ஜாதி முறையைக் குறிக்கும் எந்த பதிவும் திருக்குறலில் கிடையாது, என்பதால் R.M.ரவி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *