வைஃபை ஆன் செய்ததும் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன பேச்சு வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. அதுபற்றிய எதிரொலிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு இந்தியா முழுதும் அரசியல் ரீதியாக எதிரொலித்து வருகிறது.
‘சனாதனம் என்பது கொசுவைப் போல, டெங்குவைப் போல, மலேரியாவை போல கொரோனாவைப் போல. அதை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியதை பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா, ‘சனாதனத்தைப் பின்பற்றும் இந்தியாவின் 80% மக்களை ஒழிக்க வேண்டும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் அமைச்சர் உதயநிதி கூறுகிறார்’ என்று பதிவிட்டார். இதற்கு உதயநிதி உடனே மறுப்பு தெரிவித்து, ’என் பேச்சைத் திரித்து பொய் தகவல்களை பரப்பாதீர்கள்’ என்று பதில் கொடுத்தார். மேலும், ‘இதற்கான எந்த சட்ட விளைவுகளையும் சந்திக்கத் தயார்’ என்றும் உதயநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜிண்டால் என்பவர் உதயநிதி வெறுப்புப் பேச்சு பேசியுள்ளார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் இன்று (செப்டம்பர் 3) ராஜஸ்தானில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘திமுகவும் காங்கிரஸும் சனாதனத்தை இழிவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள். மக்களின் இதயத்தை சனாதனமே ஆள்கிறது’ என்று பேசியுள்ளார்.
தேசிய அளவில் இப்படி என்றால் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘அமைச்சர் உதயநிதி சனாதனத்தை தொற்று நோய்களோடு ஒப்பிட்டுப் பேசி இந்து மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டார். இரு பிரிவினரிடையே பிரச்சினை, கலவரம் வெடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இவ்வாறு பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி மீது ஐபிசி 153, 153 ஏ, 295, 295ஏ, 296, 298, 499,504, 505 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது. எனவே அமைச்சரான உதயநிதி மீது வழக்குத் தொடர குற்றவியல் நடைமுறை 197 இன்படி ஆளுநராகிய நீங்கள் அனுமதி வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்தாமன்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி தேவை என்பதால் இந்தக் கடிதத்தை அவர் ஆளுநருக்கு எழுதியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய இந்த சனாதன ஒழிப்புப் பேச்சை இந்திய அளவில் கொண்டு சென்று, வட இந்தியாவில் சனாதனத்தை தீவிரமாக எதிர்க்காத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக பயன்படுத்த பாஜக தீவிரமாக இருக்கிறது. வட இந்தியாவில் இங்கே தமிழ்நாட்டில் உள்ளதைப் போல தீவிர சனாதன எதிர்ப்பு இல்லை. ராகுல் காந்தியே தன்னை கவுல் பிராமணர் என்று கூறியிருந்த நிலையில்… சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் பேச்சு குறித்து காங்கிரஸ் விளக்கம் தர வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இந்த பிரச்சினையை தொடர்ந்து பேசவைக்க வேண்டுமென்றால்… உதயநிதியைக் கைது செய்ய வேண்டும் என்று கருதுகிறது பாஜக. அதற்கான சட்ட ரீதியான ஆலோசனைகள் டெல்லியில் நடந்து வருகின்றன. தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் ஆளுநர் ரவிக்கு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதி மீது வழக்குத் தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிப்பார் என்கிறார்கள் பாஜகவினர். ஏனெனில் சனாதனம் பற்றித்தான் ஆளுநர் தொடர்ந்து பல மேடைகளில் போற்றிப் பேசி வந்திருக்கிறார். இந்த நிலையில் சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் உதயநிதி மீது வழக்குத் தொடர ஆளுநருக்கு பிரச்சினை இருக்காது என்கிறார்கள். டெல்லியின் ஆலோசனை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையோடும் தொடர்ந்து நடக்கிறது.
இதற்கிடையே இது தொடர்பாக திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலினும் சட்ட ரீதியான ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டால், அவரது இமேஜ்தான் அதிகரிக்கும், இது திமுகவுக்கும் அரசியல் ரீதியான ஆதாயமாகத்தான் இருக்கும் என்று அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட அதேநேரம்… உதயநிதி மீது வேறு வழக்குகள் பதிவு செய்வதற்கும் முகாந்திரங்கள் உள்ளதா என்றும் ஆராயப்பட்டிருக்கிறது.
உதயநிதியை கைது செய்வது பற்றிய டெல்லி ஆலோசனையும், அதை எதிர்கொள்வது பற்றிய சென்னை ஆலோசனையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
சனாதனவாதிகள் உள்ள கூட்டணியிலிருந்து வெளியேறுவீர்களா? திமுகவுக்கு கஸ்தூரி கேள்வி!