சனாதன தர்மத்தை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது: ஆ.ராசா வாதம்!

சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துக்கள் குறித்து பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 10) வாதம் முன்வைக்கப்பட்டது.

சனாதனத்திற்கு எதிராக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

சேகர் பாபு தரப்பில்,  சனாதன வழக்கில் தனக்கு எதிரான உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லாமல் நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கோ வாரண்டோ வழக்கானது இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, “வரையறுக்கப்படாத காரணங்களை கூறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கோ வாரண்டோ உத்தரவு பிறப்பிக்க கோருவது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கு எதிரானதாக அமையும். அதனால் இந்த மனு ஏற்கத்தகதல்ல.

இத்தகைய கோ வாரண்டோ உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகார பகிர்வானது அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய புதிய நிபந்தனையை சேர்க்கவும், இந்த கோட்பாடானது அனுமதிக்கவில்லை.

மதத்தை பின்பற்றுவதற்கான அரசியல் சாசன உரிமையை விட உயர்ந்ததாக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை உள்ளது. அருவெறுக்கத்தக்க மத நடைமுறைகளை விமர்சனம் செய்ய பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை வழிவகை செய்கிறது. சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துக்கள் குறித்து பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி அனிதா சுமந்த் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொன்முடி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைபாடு என்ன?: நீதிமன்றம் கேள்வி!

டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts