வக்ஃப் வாரியத்தை ஒழிக்க சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்று கும்பமேளாவில் துறவிகள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில காவல்துறை இன்று (ஜனவரி 29) தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தேசிய அளவில் சனாதன வாரியம் அமைக்க சட்டம் இயற்ற வேண்டும் என அதே மகா கும்பமேளாவில் நடைபெற்ற துறவிகள் தர்மசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.
ஆன்மிகச் சொற்பொழிவாளரான தேவகிநந்தன் தாகூர் தலைமையில் நேற்று துறவிகள் தர்மசபை நடந்தது. இதில் துறவிகளுடன் பாஜக எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி, நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சனாதன வாரியம் அமைக்க தீர்மானம்!
அப்போது, தேவகிநந்தன் தாகூர் பேசுகையில், “பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் இங்கு செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்காக இந்து வாரியங்கள் இல்லை. நிலைமை இப்படி இருக்க, இங்கு மட்டும் நாம் முஸ்லிம்களுக்காக வஃக்பு வாரியத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு மாற்றாக நாம் சனாதன வாரியம் அமைத்து ஒவ்வொரு கோயிலிலும் கோசாலைகள் அமைக்க வேண்டும். ஆன்மிகச் சுதந்திரம் பெற சனாதனம் அதன் உரிமைகளுடன் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவின் கோயில்கள் அனைத்தும் அரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும்’ என்று பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில், தேசிய அளவில் சனாதன வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் இயற்றப்பட வேண்டும், உத்தரபிரதேசத்தில் வழக்கில் சிக்கியுள்ள மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில்களை ஒட்டியுள்ள மசூதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும், கோயில்களின் பிரசாதங்கள் வேதமுறைப்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக துறவிகள் தர்மசபை தீர்மானங்கள் அனைத்தும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
துறவிகள் இடையே கருத்து வேறுபாடு!
எனினும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது துறவிகள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
இக்கூட்டத்துக்கு மொத்தம் உள்ள 13 அகாடாக்களில் ஒருசிலர் மட்டுமே வந்திருந்தனர். தர்ம சபையின் முக்கிய காரணமான அகில இந்திய அகாடா பரிஷத்தின் (ஏஐஏபி) தலைவர் ரவீந்திர புரி வருகை தரவில்லை.
அவர், முஸ்லிம்களின் வஃக்பு வாரியத்தை ஒழித்த பின்பே சனாதன வாரியம் அமைக்க முடியும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதே போன்று, பிரபல துறவியான ஜகத்குரு ராமபத்ரச்சாரியா சனாதன வாரிய தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், “சனாதன் தர்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த எந்த வாரியமும் தேவையில்லை, நம்பிக்கை சுயாதீனமானது, அதற்காக தனிப்பட்ட அமைப்பு தேவையில்லை என்று தெரிவித்தார்.
பாகேஷ்வர் தாமின் பீடாதிபதியான திரேந்திர சாஸ்திரி கூறுகையில், ”சனாதன வாரியம் அமைக்க இந்தியா முதலில் ஒரு இந்து நாடாக மாற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
துறவிகள் இடையே இப்படி கருத்து வேறுபாடு நிலவுகிற போதும், துறவிகள் தர்மசபை தீர்மானங்கள் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது.

நம்பிக்கையின் மையமா? சதித்திட்டம் தீட்டும் இடமா?
இதற்கு காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “மகா கும்பமேளாவை அரசாங்கமே சொந்த செலவில் நடத்துகிறது. அதற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. அதிக வரிகளை சாதாரண மக்கள் செலுத்தும் நிலையில், அந்த பணத்தில் கும்பமேளா நடத்தப்படுகிறது. அதில் துறவிகள் செழித்து வளர்கிறார்கள்.
ஆனால் அந்த துறவிகள் அரசியலமைப்பிற்கு எதிராக, மனுஸ்மிருதியின் சாராம்சத்தைக் கொண்ட இந்து தேசத்தை உருவாக்க ஒரு வரைவைத் தயாரிக்கின்றனர். கும்பமேளா நம்பிக்கையின் மையமா? அல்லது தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டும் இடமா?இதற்கு மறைமுகமாக, பாஜக இந்த சதியில் உடன்பட்டுள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.