பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (செப்டம்பர் 6) டெல்லியில் நடைபெற்றது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை கூட்ட முடிவுகள் பற்றி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல். முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
அவர்கள் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்துக்கு ஒப்புதல், ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் பற்றிய தகவல்களை கூறினார்கள்.
அதேநேரம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சாதாரண முறையில் பிரதமர் மோடி அமைச்சர்களுடன் உரையாடியபோது சனாதனம் பற்றி திமுக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரமும் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லி மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்கள்.
அவர்களிடம் விசாரித்தபோது, “சில நாட்களுக்கு முன் திமுகவின் அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதைக் கொண்டு… சனாதன தர்ம சர்ச்சை வட இந்தியாவில் பெரிய அளவு எழுந்திருக்கிறது.
இதுகுறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களுடன் அலுவல் சாராத உரையாடலில் பிரதமர் மோடி இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
’சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் உதயநிதி பேசியிருக்கிறார். இதற்கு நமது அமைச்சர்கள் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். இப்போது இந்தியா- பாரத் என்ற விஷயத்தையும் எதிர்க்கட்சிகள் விவாதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அதைவிட சனாதன ஒழிப்பு சர்ச்சையையே நாம் பெரிய அளவில் விவாதமாக்க வேண்டும். சனாதன விவகாரத்தை தேசிய அளவில் பெரிய அளவில் பேசவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்கொள்வதற்காக சனாதனம் பற்றிய விஷயத்தைப் பற்றி அறிந்து கொண்டு உண்மைகளை முன்வைக்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாரத் விவகாரம் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேச வேண்டும்.
சனாதனம் பற்றி அமைச்சர்கள் அனைவரும் பேசுங்கள். இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்றும் பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியிருக்கிறார்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
–வேந்தன்