சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுப்பணித்துறை அமைச்சரும் கூட்டணி கட்சிகளுடனான விவகாரங்களை கையாள்பவருமான எ.வ.வேலு சிஐடியு தலைவர் செளந்தரராஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாம்சங் தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.

இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு. வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழையிலும் மதுக்கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?: அன்புமணி கேள்வி!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts