சாம்சங் போராட்டம்…ஸ்டாலினைச் சுற்றி அதிகரிக்கும் அழுத்தம்!

அரசியல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள கொரியன் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்  நிறுவனத்தின் ஊழியர்கள்  சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று  கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு நிர்வாகிகளை நள்ளிரவில்  கைது செய்தது போலீஸ். மேலும் தனியார் இடத்தில் அவர்களின் அனுமதியோடு போடப்பட்டிருந்த போராட்டப் பந்தலையும் போலீஸ் பிய்த்து எறிந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் உடனடி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில இன்று காலையும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு சிஐடியு நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

சுங்கவார்சத்திரத்தில் என்ன நடக்கிறது?

சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பினர் நரேந்திரனிடம் பேசினோம்.

“சாம்சங் ஊழியர்களின் போராட்டத்தின் கோரிக்கை சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதும் சிஐடியு சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதும்தான்.

சங்கத்தைப் பதிவு செய்வதற்கு தொழிலாளர் துறை பதிவாளரிடம் விண்ணப்பம் கொடுத்து ஒரு மாதம் கடந்தும் எந்த விதமான பதிலும் இல்லை, அதனால்தான் நீதிமன்றத்தை நாடினோம்.  அரசாங்கம் பதிவு செய்திருந்தால் சிஐடியு ஏன் நீதிமன்றத்திற்கு போகப்போகிறது?

இப்போது கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடந்து வருகிறது, சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சிஐடியு போரட்டம் செய்தனர், இன்று அகில இந்திய அளவில் சிஐடியு போராட்டம் செய்கிறது.

நாங்கள் சம்பள உயர்வோ, போனஸோ கேட்கவில்லை. எங்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கத்தை பதிவு செய்ய ஏன் அனுமதி இல்லை?

இதுகுறித்து கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை எழும்பூரில் போராடிய சிபிஎம் மாநில செயலாளர்  பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பேசுவதற்காக வந்த அமைச்சர்கள்  தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,  மாவட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் போராடிக் கொண்டிருக்கிற  தொழிலாளர்களிடம் பேசாமல்… சாம்சங் நிர்வாகத்திடமும்,  நிர்வாகத்துக்கு அணுக்கமாக இருக்கும் வெல்ஃபேர் கமிட்டியிடமும் பேசிவிட்டு கோரிக்கைகள் தீர்க்கப்பட்டதாக சொல்கிறார்கள்.  அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை மாதம் 5 ஆயிரம் ஸ்பெஷல் இன்சென்ட்டிவ் என்று அறிவிக்கிறார்கள். எங்கள் கோரிக்கை என்ன என்பதை அறிந்தும், புரிந்தும்  அறியாதது போல் புரியாதது போல் இருக்கிறது அரசு.

இதற்குக் காரணம் என்னவென்றால்…பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்  இந்தியாவில் தொழில் தொடங்க வரும்போது… அவர்கள் வைக்கும் முக்கிய நிபந்தனை, ‘எங்கள் தொழிற்சாலைகளில் தேசிய தொழிற்சங்கத்தினர் கிளை தொடங்க அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான். அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வருகிறார்கள்.

அப்படி ஒரு புரிந்துணர்வோடுதான் சாம்சங் நிறுவனம் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சிஐடியு தொழிற்சங்கத்தை அமைக்க சாம்சங் நிறுவனமும் எதிர்க்கிறது. அரசும் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் மழுப்புகிறது.

இங்கே 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர் பார்க்கக் கூடிய அதே வேலையை பார்ப்பவர் கொரியாவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அப்படியானால் இவர்கள் இங்கே எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்று பாருங்கள். சங்கமாக இருந்தால் இதையெல்லாம் கேட்பார்கள் நிர்பந்தம் செய்வார்கள் என்பதால்தான் தொழிற்சங்கத்தை அமைக்கவே கூடாது என்று கார்ப்பரேட்டுகள் நிபந்தனை விதிக்கிறார்கள். முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில்  நமது மத்திய அரசும்,  மாநில அரசுகளும் அந்த கார்ப்பரேட்டுகளின் நிபந்தனைகக்கு உட்பட்டுவிடுகின்றன. இதுதான் இப்போது சிக்கல்.

பன்னாட்டு நிறுவனங்கள் நமது தொழிலாளர்களுக்கு வேலை தருகிறார்கள். அதேநேரம் நமது அரசுதான் அவர்களுக்கு இடம், மின்சாரம், தண்ணீர் எல்லாம் தருகிறது. ஆனால் நமது சட்டம் அனுமதிக்கிற யூனியன் மட்டும் அமைக்கக் கூடாது என்று பன்னாட்டு நிறுவனங்கள் சொல்கின்றன.

தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்று பேசும்   திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகள் ஏன் இங்கே சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கவில்லை என்றால் இதுதான் காரணம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீட்டைக் கொண்டு வருகிற நிறுவனங்கள் தொழிலாளர்கள் நலன் விஷயத்தில் அடமென்ட் ஆகவே இருக்கின்றன. அவர்கள் இங்கே இருக்கும் தொழிலாளர் நல சட்டங்களுக்கு பதிலாக தங்களுக்கு சாதகமான எழுதப்படாத சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.  அவர்களின் டிமாண்டுகளை அரசால் மறுக்க முடியவில்லை, எதிர்க்கமுடியவில்லை. சங்கம் அமைப்பது தொழிலாளியின் அடிப்படை உரிமை,  ‘இந்த சங்கத்தை பதிவு செய்வது அரசின் கடமை” என்கிறார்.

சிஐடியு தங்களது போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறது என்பதே சாம்சங் போராட்டத்தின் தற்போதைய நிலைமை.

இதனிடையே இப்படிப்பட்ட சலசலப்புகள் தொடரும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறக் கூட நேரிடலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அண்மையில்தான் அமெரிக்காவுக்கு சென்று பல்லாயிரம் கோடிகளுக்கான முதலீடுகளைத் திரட்டி வந்திருக்கிறார்.  இந்நிலையில் சாம்சங்  போராட்டத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டுக்கு வர இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மறுபரீசலனை செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருபக்கம் தொழிலாளர்கள் போராட்டம், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் என தமிழ்நாடு முதல்வரைச் சுற்றிலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நல்லா மிதிக்கட்டும்… : ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி சுளீர் பதில்!

தொழிற்சங்கம் கோரிக்கை… நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும்: தங்கம் தென்னரசு

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *