சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினா் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனினும் தொழிற்சங்கம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். தொழிலாளர்களின் போராட்டப் பந்தலையும் இரவோடு இரவாக அகற்றினர்.
இந்தசூழலில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் முறையீடு செய்துள்ளார்.
அதில், “தொழிற்சங்கம் அமைக்க வலியுறுத்தி தனியார் இடத்தில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் போராட்டக்காரர்களை இரவு நேரத்தில் அவர்களது வீடு புகுந்து சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்தது.
அவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீபெரும்பதூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சொந்த பிணையில் மாஜிஸ்திரேட் விடுவித்தார்.
எனினும் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளனர். இதுதொடர்பாக கைதானவர்களின் உறவினர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சிஐடியு சார்பில் முத்துக்குமார் தாக்கல் செய்த இந்த மனுவை அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் திருமூர்த்தி கோரினார்.
இந்த மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
“சாம்சங் நிறுவனத்தின் கைப்பாவையாக மாறிய தமிழக அரசு”: அன்புமணி விமர்சனம்!
மழையிலும் போராட்டம்… சாம்சங் ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது : சவுந்தரராஜன் கடும் கண்டனம்!