வைஃபை ஆன் செய்ததும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பற்றிய வீடியோக்கள் இன்பாக்சில் சரசரவென வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே சுங்குவார்சத்திரத்துக்கு பயணம் மேற்கொண்டு வந்தபின் வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரம் தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 32 நாட்களாக நடக்கும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா முதலில் சாம்சங் நிர்வாகத்தோடு பேசினார். அதன்பிறகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், லோக்கல் அமைச்சர் தா,மோ. அன்பரசன் ஆகியோர் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் போராடிக் கொண்டிருக்கும் சிஐடியு நிர்வாகிகளோ… சாம்சங் நிர்வாகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் வெல்பேர் கமிட்டியோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக ஏன் அமைச்சர்கள் கூற வேண்டும் என்று கடுமையான கோபமடைந்தார்கள்.
இந்த நிலையில் அக்டோபர் 8 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் சாம்சங் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தான் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சாம்சங் போராட்டம் இனி தமிழ்நாட்டுக்கு வர இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடையே ஒரு மறுபரிசீலனை உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது, எனவே போராட்டத்தை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அன்று இரவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் பிரித்து எறியப்பட்டது. நள்ளிரவில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று காலை போராட்டம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சுங்குவார்சத்திரத்தில் இருக்கக்கூடிய ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள். . சிஐடியு நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், முத்துக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். உடனடியாக சிஐடியு வின் தேசிய தலைமை கடுமையாக கண்டித்து, ’இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தொழிற்சங்கம் அமைத்த குற்றத்துக்கு தமிழ்நாட்டில் சிஐடியு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’ என எச்சரித்தது.
இதற்கிடையில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், தங்கபாலு, அப்துல் சமது ஆகியோர் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், ’சாம்சங் போராட்டத்தை முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். இதுகுறித்து அவரிடம் விவாதிக்க நேரம் கேட்டிருக்கிறோம். விரைவில் முதலமைச்சரை சந்திப்போம்’ என்று தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த போராட்டத்தில் தீவிரமாக இருப்பதால் அக்கட்சியின் தேசிய தலைமையோடும் திமுக சில தகவல் பரிமாற்றங்களை நடத்தியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதியிடம் சாம்சங் போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘சாம்சங் நிறுவனத்தில் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் அமைக்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவங்க இன்டர்நேஷனல் கம்பெனி என்பதால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கிறது. அதனால கட்சி சார்ந்த தொழிற்சங்கம் அமைக்க முடியாதுனு சொல்லிவிட்டனர். தொழிலாளர்களின் மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன ‘ என்று பேட்டியளித்தார்.
இதை அறிந்து கூட்டணி கட்சித் தலைவர்கள் டென்ஷனாகி விட்டனர். ‘அப்படி என்றால் சாம்சங் சிஐடியு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அரசு தாமதிப்பதற்குக் காரணம் சாம்சங் நிர்வாகத்தின் எதிர்ப்புதான் என்பதை உதயநிதியே போட்டு உடைத்து விட்டார். இந்தியாவில் அமைந்திருக்கும் சாம்சங் கம்பெனி நம் நாட்டின் தொழிலாளர் நல சட்டத்தின்படி இயங்குகிறதா.. அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கென சிறப்பு சட்டங்கள் இருக்கின்றதா?’ என்ற கேள்விகளையும் இதை அடிப்படையாக வைத்து சிஐடியு எழுப்பியுள்ளது.
இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரத்தில் மூன்று திசைகளில் இருந்து நெருக்கடி சூழ்ந்துள்ளது.
கூட்டணி கட்சிகளின் சார்பில் தொழிலாளர் பிரச்சினை என்ற அடிப்படையிலான அரசியல் நெருக்கடி, பன்னாட்டு நிறுவனங்கள் அரசுக்கு தரும் அழுத்தம், கூட்டணி கட்சிகளுக்கு பணிந்து போகிறார் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரும் நெருக்கடி என இந்த மூன்று நெருக்கடிகளுக்கு இடையில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும், கூட்டணியையும் காப்பாற்ற வேண்டும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் சிஐடியு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை விரைவில் சந்திக்க பரிசீலித்து வருகிறார் ஸ்டாலின்” என்ற மெசேஜு க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரத்தன் டாடாவுக்கு என்ன ஆச்சு? ஹெல்த் அப்டேட்!
எனக்கே லைட்டா கன்ஃபியூஸ் ஆகிருச்சு… அப்டேட் குமாரு