திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூரில் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரின் தந்தை சா.பெருமாள் சாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி பெருமாள் சாமி நேற்று (பிப்ரவரி 23) காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நேற்று கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சரின் தந்தை இறந்த செய்தி அறிந்ததும் அவரை தொடர்புகொண்ட திமுக நிர்வாகிகள், “விழா நடக்கும் அரங்குக்கு 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்துவிட்டனர்.
அரசு அதிகாரிகள் மூலம் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்வில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் அமைச்சர் சாமிநாதன், ” ஏற்கனவே நான் உறுதியளித்தபடி சென்னிமலையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பிறகு தான் தந்தையின் இறுதிச் சடங்குக்கு செல்வேன். நீங்கள் விழா ஏற்பாடுகளை கவனியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த அமைச்சர் சாமிநாதன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கூட செல்லாமல், அரசு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரை அங்கிருந்த பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…