சேலம் – உளுந்தூர்பேட்டை சாலை : ஈஸ்வரன் நடைபயணம்!

அரசியல்

சேலம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சேலம்-உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை மொத்தம் 136.35 கிமீ. நீளம் கொண்டது.

Salem Ulundurpet Road

இந்த சாலை கேரளா, தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வருவதற்கு முக்கிய சாலையாகவும் இருக்கிறது.

இது, 4 வழிச் சாலையாக இருந்தாலும் சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச் சாலைகள் இரண்டு வழிச் சாலைகளாகவும் உள்ளன.

Salem Ulundurpet Road

இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்களான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈஸ்வரன் எம்.எல்.ஏ., சேலம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் கனரக, இலகுக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழிச் சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது.

இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை.

அண்மையில் வந்த செய்தி மற்றும் புள்ளி விவரங்களின் படி, கடந்த 11 வருடங்களில் 1050 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும்,

4000க்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றும்,

அதில் பலர் ஊனத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

காவு வாங்கும் இந்த சாலையை பொதுமக்கள் மிகுந்த மரண பயத்துடன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மேற்கு பகுதி சென்னையுடனும் மற்றும் நாட்டின் மற்ற பகுதியுடனும் இணைக்கின்ற சாலை. அதனால் போக்குவரத்து மிக அதிகமாக உள்ள சாலையாக இது உள்ளது.

இது சம்பந்தமாக நான் தமிழகச் சட்டமன்றத்தில் கள நிலவரத்தை விளக்கிப் பேசி உள்ளேன்.

இருவழிச் சாலை முழுவதையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் சட்டமன்றத்திலே ஒப்புக்கொண்டார்.

ஆனாலும் உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுகின்ற பணிகள் தொடங்கப்படவில்லை.

தமிழக அரசும், ஒன்றிய அரசும் கலந்து ஆலோசித்து போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழிச்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும்.

எனவே சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பகுதிகளும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும்,

சாலையை மாற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும்,

வருகின்ற அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

சிம்புவுக்கு சொகுசு கார் வழங்கி அசத்திய ஐசரி கணேஷ்

+1
0
+1
1
+1
1
+1
4
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *