அண்ணாமலை பேட்டி கொடுத்தே பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று(ஏப்ரல் 15) நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புறநகர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்களான மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு, முதல்முறையாக வருகை தந்ததால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்களைத் தூவியும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி. அப்போது அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினர் தொடர்பாக வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்தும், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தபோது, அவர் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவர் வெளியிடட்டும் பார்க்கலாம்” என்றார்.
கர்நாடக மாநில தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாளை அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து நாளை கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்” என்றார்.
அப்போது அதிமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் டிடிவி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக அன்றைய தினமே பல்வேறு செய்திகளை வெளியிட்டது.
எனவே, அவருக்குச் சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்” என்றார்.
அண்ணாமலை மறைமுகமாக அதிமுகவை விமர்சிக்கிறாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார்.
எனவே அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனக்கு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என்று தெரியும். அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.
வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார்.
இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். எனவே, தயவுசெய்து ஊடகங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்