சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதனுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 2) உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஜெகன்நாதன் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் துணை வேந்தர் ஜெகன்நாதன், பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர்,
கோவை நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிறுவனத்திற்கான கட்டிடத்தை ஆட்சிமன்ற குழு, அரசு அனுமதியின்றி கட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க கெளரவ தலைவர் இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனை தொடர்ந்து துணைவேந்தர் ஜெகன்நாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் கூட்டு சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துணைவேந்தர் ஜெகன்நாதன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சேலம் கூடுதல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில்,
“வழக்கு தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கியது தவறு.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
துணைவேந்தர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, “புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை.
புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கு தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. துணைவேந்தர் தரப்பு, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
ஜனவரி 12-ஆம் தேதிக்குள் இரண்டு தரப்பும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். ஜாமீன் வழங்கியது தொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு:நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!
மழை பாதிப்பு… இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை!
திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம்:உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?