சேலம் என்பது எப்போதுமே திமுகவுக்கு பஞ்சாயத்துகள் நிறைந்த மாவட்டம்தான். இதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன அந்த மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள்!
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக 8, பாமக 2, மொத்தம் பத்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது, திமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.
சமீபத்தில் கூட அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகம் முழுதும் திமுக ஆட்சி நடந்தாலும் சேலத்தில் எப்போதும் அதிமுக ஆட்சிதான்’ என்று பகிரங்கமாகப் பேசினார்.
சேலம் திமுகவுக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள் தீராது என்ற நம்பிக்கையில்தான் எடப்பாடி இப்படி பேசினார் என்கிறார்கள் திமுக நிர்வாகிகளே.
இந்த பின்னனியில்தான்… சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நேற்று முன் தினம் (ஆகஸ்டு 25) தனது சமூக தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். “என் பணியை செய்ய இடையூறு செய்யாதே…. நானும் மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.தானே?’ என்று பதிவிட்டிருந்தார்.

தனது சேலம் மேற்கு தொகுதியில் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளருமான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடத்துகிறார்.
ஆனால் தனக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்டிருந்தார், தகவல் தெரிந்த ராஜேந்திரன் நேற்று ஆகஸ்டு 26 ஆம் தேதி அருள் எம்.எல்.ஏவை அழைத்துக்கொண்டு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருளை சமரசம் செய்துவிட்டுப் போனார்.

இந்த நிலையில் சேலம் திமுக எம்பி பார்த்திபன் நேற்று ஆகஸ்ட் 26ஆம் தேதி காலையில் தனது ட்விட்டர் பகுதியில் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார்,
அதில், “ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பது சட்ட விரோதமானது, சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்க்கட்சி எம்பி என்று நினைக்கிறார் போலும்.
மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார், என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்குச் சமம்” என்று மனம் புழுங்கி ஒர் பதிவிட்டிருந்தார்.
ஓர் ஆளுங்கட்சி எம்பிக்கே இப்படியா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது.

இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அதே எம்பி பார்த்திபன் நேற்று மாலையில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், “ சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன் நன்றி.
சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் எல்லோருடைய நோக்கமும் மக்களுக்குச் சிறந்த சேவையை கொடுப்பதுதான். மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
எட்டு மணி நேரத்தில் அப்படியென்ன மாற்றம் என்று சேலம் திமுக நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தோம்.
“சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான பனைமரத்துபட்டி ராஜேந்திரன், தொடர்ந்து சேலம் எம்பி பார்த்திபனை புறக்கணித்து வந்திருக்கிறார்.
எம்பிக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளிடமும் உத்தரவிட்டிருக்கிறார். ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க 85 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார் பார்த்திபன் எம்பி. ஆனால், அந்த நிதியை வேண்டாம் என்று பேரூராட்சி தலைவர் செல்வராணி மூலம் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார் ராஜேந்திரன்.
எதிர்க்கட்சியிடம் கூட காட்டாத எதிர்ப்பை தன்னிடம் தனிப்பட்ட முறையில் ராஜேந்திரன் காட்டுகிறார் என்று சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேருவின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார் எம்பி பார்த்திபன்.
இதையடுத்து, நேரு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் கேட்க, ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே…’ என்று சொல்லியிருக்கிறார் ராஜேந்திரன்.
ஆனாலும் தொடர்ந்து பார்த்திபனை பல வகைகளிலும் புறக்கணித்தபடியே இருந்தார் ராஜேந்திரன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பார்த்திபன் ட்விட்டரில் தனது குமுறல்களை பதிவிட்டதும், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றுள்ளது.
உடனடியாக அவர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனைத் தொடர்புகொண்டார்.
‘என்ன தனி ராஜ்ஜியம் செய்யறிங்களா? ஒழுங்கா கட்சியை வளர்க்குற வழிய பண்ணுங்க’ என்று லைனைத் துண்டித்திருக்கிறார் முதல்வர். அடுத்தபடியாக எம்பி பார்த்திபனையும் தொடர்புகொண்டார்.
‘உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமைக்குச் சொல்லுங்க. இப்படி பொதுவெளியில் சொல்வது சரியில்லை, இனி எல்லாம் சரியாகநடக்கும்.
அதிகாரிகளும் உங்களை மதிப்பாங்க, இப்போதே பேசுவாங்க’ என்று அட்வைஸ் செய்துள்ளார் முதல்வர்.

இவர்கள் இருவரிடமும் தொடர்புகொண்டுவிட்டு…. அடுத்தபடியாக பொறுப்பு அமைச்சர் கே.என் நேருவையும் தொடர்புகொண்டு இந்த விவகாரம் பற்றி பேசியிருக்கிறார்.
முதல்வரின் உத்தரவையடுத்து அமைச்சர் நேருவும் உடனடியாக கலெக்டர், மாநகராட்சி ஆணையரிடம் தகவல்கள் சொல்லி எம்பியிடம் பேசச்சொல்லியுள்ளார்.
அடுத்த 20 நிமிடத்தில் மாநகராட்சி ஆணையர் எம்பி பார்த்திபனைத் தொடர்புகொண்டு, ’ஸாரிங்க இனிமேல் அப்படி எதுவும் நடக்காது.
அனைத்து அரசு விழாவுக்கும் உங்களை அழைப்போம், உங்கள் எம்பி நிதியை இனிமேல் பயன்படுத்திக்கொள்வோம்’ என்று கூறியிருக்கிறார்.
அவரைப் போன்று மற்ற அதிகாரிகளும் எம்பி பார்த்திபனை தொடர்புகொண்டும் நேரடியாக சந்தித்தும் பேசியுள்ளார்கள். இதுபோன்ற பாசிட்டிவான சம்பவம் நடந்ததால்தான் எம்பி பார்த்திபன் மாலையே பாசிட்டிவான பதிவை வெளியிட்டிருந்தார்” என்கிறார்கள் திமுக இளம் நிர்வாகிகள்.
–வணங்காமுடி
வாக்காளர் அடையாள அட்டை அட்வான்ஸ் புக்கிங் செய்யலாம்!