எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் நண்பரான ஆர்.இளங்கோவன் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கக்கூடிய சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை மதிப்பீடு செய்யவும்,
அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக்கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இளங்கோவனுக்கும் அறக்கட்டளைக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 11) நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டடங்களை மதிப்பீடு செய்வதையும், ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது.
புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது’ என்று கூறி, அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜெ.பிரகாஷ்