தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக, டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் பெய்த கன மழை காரணமாக, நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் 17-ஆம் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேலம் பெத்தநாயக்கன் பாளையம் மாநாட்டு திடலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தசூழலில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநாட்டு வரவேற்பு குழு செயலாளரும், இளைஞரணி மாநில துணை செயலாளருமான ஜோயல் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகாசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்துள்ளாதால் இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் தென் மாவட்டங்களிலிருந்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.