இளைஞரணி மாநாடு இந்தியாவின் மாநாடு: ஸ்டாலின்
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சேலம் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு, ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கிய தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 18) தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து ஸ்டாலின் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசும்போது, “இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சேலத்துக்கு வர நான் தயாராகிட்டேன். நீங்க தயாராகிட்டீங்களா? என்னைப் பார்க்குறப்போ உங்களுக்குள்ள எப்படி ஒரு உற்சாகமும் புத்துணர்ச்சியும் பிறக்குதோ, அதேமாதிரி உங்கள பார்க்குறப்போ எனக்குள்ளயும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் பிறக்குது.
உங்களோட முகங்கள பார்க்குறதும், நீங்க எழுப்புற கொள்கை முழக்கங்களை கேட்குறதும் தான், எனக்கு மகிழ்ச்சியும் மன நிறைவையும் தர்ற விஷயங்கள்.
இன்னைக்கு நேத்து இல்லை, 1980-ல இருந்தே இது எனக்கு பழக்கமாயிடுச்சு. எப்போம் கலைஞரும், பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கி என்கிட்ட ஒப்படைச்சாங்களோ, அன்னையில இருந்து தொண்டனுக்கு தொண்டனா உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பா தான் செயல்பட்டு வர்றேன்.
இன்னைக்கு கூட திமுக தலைவரா இல்லை, தலைமை தொண்டனா தான் செயல்படுறேன். கொள்கை உறவு உடன்பிறப்புகளோட மாநாடு தான் சேலம் மாநாடு.
2007-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இளைஞரணியின் முதல் மாநாட்டை நான் தலைமேற்று நடத்தினேன்.
இப்போம் 2024-ஆம் ஆண்டு சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை இளைஞரணி செயலாளர் தம்பி உதயநிதி சிறப்போடு ஏற்பாடு செஞ்சு நம்மையெல்லாம் அழைச்சிருக்காரு.
இளைஞரணி மாநாட்டோட நோக்கம், மாநில உரிமைகளை வென்றெடுக்குறதுன்னு உதயநிதி திட்டமிட்டுருக்கார்.
மாநில உரிமைகளை காக்குறது தான், இந்தியாவை காக்குறது. அந்தவகையில இளைஞரணி மாநாடு இந்தியாவோட மாநாடுன்னு சொல்லத்தக்க வகையில, பிரம்மாண்டமா நடக்க இருக்கு.
இந்திய நாடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கு. தேர்தலுக்கு பிறகு அமைய இருக்குற இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியா அமையும்.
இதுக்கெல்லாம் தொடக்க மாநாடா சேலம் மாநாடு அமைய போகுது. சேலம் செல்ல நான் தயாராகிட்டேன். நீங்களும் தயாராகிட்டீங்களா? சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களை தான் தேடும். சேலத்தில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது : உதயநிதிக்கு வானதி பதில்!
உண்மையான GOAT: ரோஹித்தை புகழ்ந்த மும்பை வீரர்… மீண்டும் மீண்டுமா?