திமுக இளைஞரணி மாநாடு: சாதனைக்கான மாநாடா?

அரசியல்

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திமுகவின் இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இன்று (டிசம்பர் 17) நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மாநாட்டு பணிகளுக்கான பொறுப்பை ஏற்று பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறார் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு.

பந்தல் பணிகளை பந்தல் சிவா பார்த்துப்பார்த்து  வேலை செய்து வருவதாக, திமுக இளைஞரணி நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர்.

டிசம்பர் 24 -ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு முக்கிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் ஆகியோருக்கு நேரடியாக சென்று இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அழைப்பு கொடுத்து வருகிறார்.

மாநாட்டு செலவுகளுக்கு திமுக அமைச்சர்கள், ஒன்றிய சேர்மன், நகரமன்ற சேர்மன், மாநகர மேயர், எம் எல் ஏ, எம் பி.க்கள், ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள்  எல் முதல் சி வரையில் டார்கெட் ஃபிக்ஸ் செய்து வசூலித்து தலைமையிடம் கொடுத்து வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மாநாட்டு பணிகள் தொடர்பாகவும், இவ்வளவு பணம் வசூலிக்கப்படுவது தொடர்பாகவும் சில திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.

“இதுவரையில் 9 லட்சம் சதுர அடியில் மாநாடு நடத்தியது இல்லை. முதல்முறையாக திமுக இளைஞர் அணி மாநாடுதான் 9 லட்சம் சதுர அடியில் பந்தலிட்டு நடைபெற உள்ளது.

1500 அடி அகலம், 600 அடி நீளம்  என 9 லட்சம் சதுர அடியில் வேலைகள் நடந்து வருகின்றன.  இதில் உணவு திடலுக்கு மட்டும் 4 லட்சம் சதுர அடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இரண்டு லட்சம் இருக்கைகள், மதியம் 5 லட்சம் பேருக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி,  இரவு டிபன், இடையில் காபி மற்றும் ஸ்நாக்ஸ் கொடுக்கவும் திட்டமிட்டு ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.  அதற்காகத்தான் இவ்வளவு பணமும் வசூலிக்கப்படுகிறது.

கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்” என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

இந்த சூழலில் இன்று (டிசம்பர் 17) சேலம் சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், நேரடியாக பெத்தநாயக்கன் பாளையம் சென்று மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் உடன் இருந்தனர்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம்: ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

முடி கொட்டிய பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது: எம்.எஸ்.பாஸ்கர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *