சேலம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரான செல்வகணபதியின் மனுவை எதிர்கட்சியினரின் புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்ததால் திமுகவினரின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய சேலம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி, அதிமுக வேட்பாளர் விக்னேஷ், பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் மற்றும் சுயேட்சைகள் உட்பட 52 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியிலும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் வாய்மொழியாக தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த புகாருக்கு திமுக சார்பில் பதிலளிக்க தயாராகி வருகின்றனர். தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றிருப்பதை முன்பே கண்டறிந்த செல்வகணபதி அதை நீக்கக் கோரி தேர்தல் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் செல்வகணபதிக்கு தெரியாமலேயே அவரது பெயரை யாரோ திட்டமிட்டு இணைத்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
செல்வகணபதி தனது பெயரை நீக்கக் கோரி அளித்த மனுவின் காப்பியையும் இணைத்து தேர்தல் அதிகாரி பிருந்தாதேவியிடம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தையும் அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.
எல்லா ஆவணங்களும் தங்களிடம் தெளிவாக இருப்பதாகவும், இதன் காரணமாக செல்வகணபதியின் மனு உறுதியாக ஏற்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிடிவி தினகரன், செல்வ கணபதி வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு!