முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 28) சந்தித்து பேசினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பேசிய அவர் இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற கோரி மனு அளித்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இலக்கு வைத்து மதுபானம் விற்பனை செய்கின்றனர். இந்த வருடம் 45 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு வைத்திருக்கின்றனர். அடுத்த வருடம் 50 ஆயிரம் கோடி இலக்கு வைப்பார்கள். இப்படி நடந்தால் மக்களை காப்பாற்ற முடியாது” என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், “இன்று சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது. இதற்கு நீதிமன்றம் உரிய தீர்வு காண வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஆண்டு 22 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 65 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இது அடுத்த ஆண்டு 100ஆக அதிகரிக்க கூடும்.
தமிழக அரசுதான் சிபிசிஐடியை வழிநடத்துகிறது. இந்த வழக்கில் மாநில அரசே விசாரணை நடத்தினால் எப்படி உண்மை வெளியே வரும்.
அதனால் தான் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கிறோம். இன்று 10 லட்சம் ரூபாய் கொடுப்பது மட்டும் தீர்வாகாது. போன உயிர் திரும்ப வருமா?
முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காதது ஏன்? மரக்காணத்தில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 65 பேர் உயிரிழந்திருப்பார்களா? காவல்துறை உதவியுடன் தான் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக மக்களே கூறுகின்றனர்.
திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அடிமையாகிவிட்டதால், கள்ளச்சாராயம் விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசாங்கம் குற்றம் செய்திருப்பதால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களிடமிருந்து நழுவி ஓடுகிறார்கள்.
உதயநிதியின் பெயரை நாடாளுமன்றத்தில் சொல்லி அவர்களது தலைமுறையை வலிமை படுத்துகிறார்கள். ஆனால், தமிழகத்தின் தலைமுறை கேள்விகுறியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சியை பேச அனுமதிக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டும் என்கிறார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கைத்தட்டுகின்றனர்.
ஆனால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. அங்கு ஒரு நிலைப்பாடு, இங்கு ஒரு நிலைப்பாடு என திமுக செயல்படுகிறது. இதுதான் திராவிட மாடலின் சான்று” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அயோத்தியில் அலறவிட்ட ஆட்டக்காரர்… யார் இந்த அவதேஷ் பிரசாத்?
ஊட்டி கொடைக்கானல் : இ பாஸ் நடைமுறை நீட்டிப்பு!