அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: அன்புமணி கோரிக்கை!

Published On:

| By Jegadeesh

Salary hike for government doctors

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு வயது 13 ஆண்டுகள்.

இந்தக் கோரிக்கைக்காக நடத்தப்படும் தொடர் போராட்டத்திற்கு இம்மாதம் 23-ஆம் தேதியுடன் வயது 4 ஆண்டுகள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அறவழிகளில் தொடர் போராட்டங்களை நடத்தியும் இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும்,

பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் ஊதிய முரண்பாட்டுக்கு காரணம்.

13-வது ஆண்டு பணிக்காலத்தின் இறுதியில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1.23 லட்சம் அடிப்படை ஊதியத்தை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்குவதன் மூலம் இந்த அநீதிக்குத் தீர்வு காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால பிரிவுகளைப் பயன்படுத்தி இதை செய்ய முடியும். ஆனால், ஏனோ அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

அதேபோல், கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் பணியில் இருந்த போது கொரோனா தாக்கி உயிரிழந்த,

காது, மூக்கு, தொண்டை மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.

இது பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்கள் செய்த தியாகத்தை அங்கீகரிக்க மறுக்கும் செயல் ஆகும்.

உயிர்காக்கும் பணியில் உள்ள மருத்துவர்களை, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய சூழலுக்கு ஆளாக்குவதே அடக்குமுறை.

அந்த நிலையை மாற்றி தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் பணி செய்யும் போது உயிரிழந்த 9 மருத்துவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் திவ்யா உள்ளிட்ட தலா ஒருவருக்கு அரசு வேலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ”என்று கூறியுள்ள அன்புமணி,”

அதன் மூலம் இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு நிறைவடையவுள்ள சூழலில் அரசு மருத்துவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும்.

அது தான் அரசு மருத்துவர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் அரசால் அளிக்கப்படும் அங்கீகாரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இந்திய அணியின் பேட்டிங்: ரோகித் சர்மா கவலை!

லட்சுமி மேனன் உடன் திருமணமா? – விஷால் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share