இளைஞரணி மாநாடு : சேலத்தில் தயாராகும் ஏற்பாடுகள்!

Published On:

| By Kavi

salem dmk youth wing Conference

திமுக இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் திருநெல்வேலியில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற இருக்கிறது.

இளைஞரணியின் மாநாடு தொடர்பாக நாம் நேற்று (ஜூலை 29) செய்தி வெளியிட்டிருந்தோம். மாநாடு… மாஸ் காட்டத் தயாராகும் உதயநிதி என்ற தலைப்பில் வெளியான செய்தியில், “‘இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இளைஞர் அணியின் இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

மாநாட்டை எங்கே நடத்துவது என்ற ஆலோசனையில் கொங்கு மண்டலத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்’ என்கிறார்கள் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதனை இன்று உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி கூட்டத்தில் உறுதி செய்துள்ளார்.

இன்று (ஜூலை 29) அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், இளைஞரணி அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீங்கள் எல்லாம் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலின் வெற்றிக்காக உழைத்தீர்கள். வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உழைக்க வேண்டும்.  இங்கு இருக்கக் கூடிய பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் உங்களில் சிலரை விடவும் நான் வயதில் சிறியவன், ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பு எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் எல்லாம் உங்களை நம்பித்தான்.

நாளுமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல், திருச்சியில் தலைவர் பேசும் போது இந்தியாவுக்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனவே கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், எந்த விதமான புகாரும் வரக்கூடாது.

வரும் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் மாநாடு நடைபெறவுள்ளது. அதை மிகப்பெரிய மாநாடாக நடத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இளைஞர் அணி மாநாட்டுக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டைத் தலைமையேற்று எழுச்சியோடு நடத்தினார் கழகத் தலைவர். அவருடைய வழியில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை தலைவர் வழங்கியுள்ளார்.

இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது, 5 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளைச் சிறப்புற மேற்கொள்ள, இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

salem dmk youth wing Conference

ஏற்கனவே கடந்த ஜூலை 26ஆம் தேதி திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனை முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘நேரு என்றாலே மாநாடு, மாநாடு என்றால் நேரு. இந்த கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று பாராட்டியிருந்தார்.

அதுபோன்று டிசம்பரில் சேலத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகளையும் சேலத்துக்கு பொறுப்பு அமைச்சரான நேரு இப்போதே செய்ய தொடங்கியிருக்கிறார்.

“சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு இடம்பார்ப்பது, கூட்டத்துக்கு வருபவர்களுக்கு டி ஷர்ட் ரெடி செய்வது என இப்போதே பணிகள் நடந்து வருகின்றன.  இளைஞரணி லோகோவோடு மீடியம். லார்ஜ் போன்ற அளவுகளில் ஒரு லட்சம் டி ஷர்ட்டுகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்கிறார்கள் திமுக இளைஞரணி வட்டாரத்தில்.

பிரியா

“திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது” – எடப்பாடி

ரசிகர்களின் போராட்டம்…மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel