தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஏப்ரல் 27) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2021-ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழகத்திற்கு 7536 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்தது. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4,500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது 2712 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 9000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் அளவு தேவைப்படுகிறது. தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு இல்லாதபோது மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்குகிறது என்ற எண்ணம் உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசிற்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் செவிசாய்க்கவில்லை. மலைப்பகுதிகளில் நிறைய பேர் மண்ணெண்ணெய் வைத்து தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13,485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2020-ஆம் ஆகஸ்ட் முதல் மாதம்தோறும் 30,647 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 2020 முதல் மாதம் 8532 மெட்ரிக் டன் கோதுமை தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒன்றிற்கு கூடுதலாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளோம். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு உயர்த்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அதிமுக ஆட்சியில் நிலக்கரி ஊழல்: அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.360 கோடி
விஷாலுக்காக இறங்கி வருவாரா விஜய்?