14வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சச்சின் பைலட் இன்று (செப்டம்பர் 21) இணைந்துள்ளார்.
ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடந்த 7ஆந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11ஆம் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.
நேற்று ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் தனது 13ஆம் நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார்.
அவருடன் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்களுடன் நடைபயணத்தில் பங்கு பெற்றனர்.
மேலும் சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட பயணத்தில் ஆலப்புழா வடக்கால் கரையில் உள்ள மீனவர்களை சந்தித்து ராகுல்காந்தி உரையாடினார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சிக்கல், மானியம் குறைக்கப்பட்டது உள்ளிட்ட தங்களது பிரச்சனைகளை ராகுலிடம் மீனவர்கள் தெரிவித்தனர்.
கார் பயணத்தை மறுத்த ராகுல்!
அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “ஒரு கையளவு மக்கள் மட்டுமே மொத்த நாட்டையும் கட்டுப்படுத்த பாஜக தலைமை விரும்புகிறது.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முதலில் வாகனம் மூலம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில், காரில் செல்ல முடியாத நிலையில் நம் நாட்டில் பல கோடி மக்கள் உள்ளனர்.
மேலும் நடைபயணம் மூலம் மக்களை எளிதில் சந்திக்க முடியும் என்பதால் நான் யாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்தேன்” என்று கூறினார்.
நேற்று ஒரேநாளில் 14 கிலோமீட்டர் நடந்த பாதயாத்திரை குழுவினர் ஆழப்புழாவை கடந்து இரவு எர்ணாகுளம் அருகே கொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கினர்.
ராகுல்காந்தியுடன் சச்சின் பைலட்!
இந்நிலையில் இன்று கொச்சி மதவனா சந்திப்பில் இருந்து ராகுல்காந்தி 14 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார்.
முன்னதாக கும்பளம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஸ்ரீநாராயண குரு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இந்த நடைபயணத்தில் முதன்முறையாக ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ராகுல்காந்தியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் இதில்பங்கு கொண்டுள்ளனர். எடப்பள்ளி வழியாக தொடரும் இன்றைய நடைபயணம் ஆலுவாவில் நிறைவு பெறுகிறது.
நடைபயணத்திற்கு எதிராக மனுதாக்கல்!
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவுக்கு ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நாளை (செப்டம்பர் 22) விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லிக்கு விரையும் ராகுல்காந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 2 தினங்களில் தொடங்குகிறது.
இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார்.
அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் மறுநாள் 24ஆம் தேதி காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராகுல் காந்தி சாலக்குடியில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : நபார்டு வங்கியில் பணி!
விற்கப்படும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்!