மக்களவைத் தேர்தல்: சபரீசனின்  ’ஆபரேஷன் கொங்கு’ ஆரம்பம்!  

அரசியல்

கொங்கு என்பது திமுகவுக்கு அண்மைக் காலமாகவே தொடர் சரிவுகளை மட்டுமே கொடுத்து வரும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான கொங்கு வியூகத்தை அமைக்க ஆரம்பித்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன்.

2011, 2014, 2016 ஆகிய தேர்தல்களில் திமுகவுக்கு கை கொடுக்காமல் போன  கொங்கு, 2019 இல் மட்டும் தமிழகத்தில் நிலவிய மோடி எதிர்ப்பு அலையால் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கரையேற்றியது. 

கடந்த 2021  சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் திமுகவை காலை வாரியது.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்றத்  தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக கொங்கு விஷயத்தில் கொஞ்சம் முன்கூட்டியே விழித்துக் கொண்டுள்ளது.

பொதுவாகவே கொங்கு பகுதி அதிமுகவின் கோட்டை என அறியப்பட்ட நிலையில், கடந்த 2021  தேர்தலில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தலையடுக்க ஆரம்பித்தது. இந்த கோட்டைக்கு மேலும் வலுவூட்டவே செய்திருக்கிறது. மேலும் 2019  மக்களவைத் தேர்தலின் போது திமுக எதிர்க்கட்சியாக இருந்ததும், மோடி எதிர்ப்பு அலையும் அதற்கு உதவியது.

ஆனால்  வரும் மக்களவைத் தேர்தலின் போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கொங்கு பங்காளிகள் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்கள் பொதுவாக அதிமுகவுக்கே ஆதரவளிக்கிறார்கள் என்ற தோற்றமும் புள்ளி விவரமும் இருக்கும் நிலையில்…   அருந்ததியர் உள்ளிட்ட மாற்று சமூகத்தினரின் ஆதரவை திரட்டுவது என்ற கோணத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது திமுக. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் ஏழு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். ஒட்டன் சத்திரம் சக்கரபாணி கொங்கு மண்டலத்தில் சேராதவர் என்று வைத்துக் கொண்டால் கொங்கு மண்டலத்தில் திமுகவில் (ஈஸ்வரன் தவிர)  6 கொங்கு வேளாளர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

திருப்பூர் செல்வராஜ், காங்கயம் சாமிநாதன், கரூர் செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி இளங்கோ, நாமக்கல் ராமலிங்கம்,  ஈரோடு முத்துசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் சக்கரபாணி ஆகிய ஏழு கொங்கு வேளாளார் சமுதாய எம்.எல்.ஏ.க்களில் இப்போது நான்கு பேர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

எனினும் எடப்பாடி காலத்து அதிமுக கொங்கு பகுதியில் வீரியமாக இருப்பதால் கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்புகளை பெறும் வகையில் மாற்று சமூகத்தினரை அரவணைக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் திமுகவுக்கு வந்திருக்கிறது. இதை திமுகவின் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி உணர்ந்தே இருக்கிறார்.

திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் முதலியார், செட்டியார் சமுதாயம், கோவையில் நாயுடு சமுதாயம் , ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அடர்த்தியாக இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமுதாயம்  ஆகியோரை நோக்கி திமுகவின் பார்வை இப்போது திரும்பியிருப்பதாக தெரிகிறது.

Sabarisan's 'Operation Kongu' Begins parliament election

இதன் முதல்கட்டமாக வேட்டுவ கவுண்டர் சமுதாய அமைப்பை கடந்த சில  ஆண்டுகளாக வீரியமாக நடத்தி வரும், ‘புதிய திராவிட கழகம்’ கட்சியின் ராஜ் (கவுண்டர்) என்ற இளைஞரை முதல்வரின் மருகமன் சபரீசன் நேற்று (செப்டம்பர் 13)  சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் இல்லத்துக்கு அழைத்துப் பேசியிருக்கிறார். 

ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அடர்த்தியாகவும் சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவலாகவும் இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமுதாயம் அரசியல் பிரநிதித்துவத்துக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

இருபதாண்டு காலமாக எந்த கட்சி சார்பாகவும் இந்த சமுதாயத்தில் இருந்து யாரும் வர வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த விவரங்களை அறிந்த சபரீசன், தற்போது வேட்டுவ கவுண்டர்களின் துடிப்பான அமைப்பான புதிய திராவிடர் கழகத்தின் தலைவரான ராஜ்ஜை அழைத்துப் பேசியிருக்கிறார்.

Sabarisan's 'Operation Kongu' Begins parliament election

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கரூரில்  புதிய திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு ஒன்று நடந்தது.  அப்போதைய  அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி. செங்கோட்டையன், கருப்பணன் அகிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

கரூரில் நடந்த இந்த மாநாட்டைப்  பார்த்து ராஜ் ஜை எடை போட்ட செந்தில்பாலாஜி உடனடியாக  இந்த விவகாரத்தில் தலையிட்டு புதிய திராவிடர் கழகம் கட்சியை தேர்தலுக்கு முன்பே  திமுக கூட்டணிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

Sabarisan's 'Operation Kongu' Begins parliament election

கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர்கள் திமுக கூட்டணிக்கு வேலை செய்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் கொங்கு மண்டல வாக்கு வங்கி நிலையை புள்ளி விவரங்களுடன் சபரீசனுக்கு எடுத்துச் சென்று,  ராஜ்- சபரீசன் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தது செந்தில்பாலாஜிதான்.

கொங்கு வேளாளர்களுக்கு எதிராக செந்தில்பாலாஜி செயல்படுவதாக இதில் திமுகவைச் சேர்ந்த சில கொங்கு வேளாளர்களுக்கே வருத்தம்தான் என்றாலும்,  அதுபற்றி கவலைப்படாமல் திமுகவை கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற வைக்க எல்லா வகையிலும் செயல்பட்டு வருகிறார் செந்தில்பாலாஜி என்கிறார்கள்.

இந்த பின்னணியில் ராஜ் ஜுக்கு சபரீசன் தரப்பில் சில உத்தரவாதங்கள் தரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதன் அடிப்படையில் கொங்கு மண்டலத்தில் உள்ள வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும்  பணியில் உடனடியாக ராஜ்  இறங்கியிருக்கிறார்.

இதுகுறித்து சபரீசனை சந்தித்த ராஜ்ஜிடமே பேசினோம்.  “இது மரியாதை நிமித்தமான சந்திப்புதாங்க. மற்றவை பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது” என்று முடித்துக் கொண்டார்.

அவர் சொல்ல மறுத்தாலும், “கொங்கு திமுகவின் மரியாதையை நிலைநாட்டும் விதமான சபரீசன் நடத்தும் ஆபரேஷன் கொங்குவின் முதல்  கட்டம் இது. அடுத்தடுத்த சந்திப்புகளைத் தொடர இருக்கிறார் சபரீசன் ” என்கின்றன சித்தரஞ்சன் சாலைப் பறவைகள்! 

வேந்தன்

“சிற்பி திட்டத்தில் எந்தவித புகாரும் இருக்க கூடாது” – முதல்வர் ஸ்டாலின்

+1
2
+1
1
+1
0
+1
37
+1
2
+1
7
+1
2

1 thought on “மக்களவைத் தேர்தல்: சபரீசனின்  ’ஆபரேஷன் கொங்கு’ ஆரம்பம்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *