வைஃபை ஆன் செய்ததும் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் பற்றிய மின்னம்பலத்தின் மெகா சர்வே வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்துகொண்டே இருந்தன. அதுபற்றிய வாசகர்களின் ரியாக்ஷன்களும் வந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியிருக்கிறது.
“நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதி வரைதான் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால், பிரச்சாரக் களம் க்ளைமேக்ஸில் இருக்கிறது. இதை ஒட்டியே இன்னொரு களமும் சூடுபிடித்திருக்கிறது. அதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ரகசியக் களம்.
தமிழ்நாட்டில் ஐ.டி. ரெய்டுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சீனியர் அமைச்சர்களிடம் முக்கிய அறிவுறுத்தல்களை செய்தார். இதுபற்றி டிஜிட்டல் திண்ணையில் கூட செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
‘பாஜக தனது ஒன்றிய அரசின் துறைகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் திமுகவை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் எந்த நிர்வாகியாவது எங்கேனும் பணத்தோடு பிடிபட்டால் அல்லது வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்டால் திமுக என்ற கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யும் அளவுக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. எனவே அதுபோல யாரும் எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது’ என்பதுதான் ஸ்டாலினுடைய அறிவுறுத்தல்.
இதற்கிடையே அதிமுகவினரும், ஏன் பாஜகவினரும் கூட ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்கள், வேலூரில் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்காக ஆம்பூர், வாணியம்பாடி ஏரியாக்களில் ஐநூறு ரூபாய் வரை நேற்று முன் தினம் இரவு முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து லோக்கல் திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் துரைமுருகனுக்கும், மாசெ நந்தகுமாருக்கும் தகவல் அளித்தனர். இதுகுறித்து நிர்வாகிகள் துரைமுருகனிடம் கேட்டபோது, ‘நாம் எதுவும் கொடுக்கக் கூடாது என்று தலைவர் சொல்லியிருக்காரு’ என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சரின் மாப்பிள்ளை சபரீசன் தமிழ்நாட்டில் பரவலாக ரகசிய ரவுண்டு வந்துகொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஈரோடு சென்ற சபரீசன் அங்கே அமைச்சர் முத்துசாமியிடம் சில ஆலோசனைகளை செய்திருக்கிறார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு எதிராக சில உள்ளடி வேலைகள் நடைபெறுவதை தனது, ‘பென்’ நிறுவனம் மூலம் அறிந்த சபரீசன், அதுகுறித்து முத்துசாமியையும், வேட்பாளர் பிரகாஷையும் அழைத்து பேசியதாக தெரிகிறது.
அதன் பின் சபரீசன் கோவை சென்றார். அண்ணாமலைக்கு எதிரான வியூகங்கள் பற்றி அங்கே ஆலோசித்தார். இதன் பின் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு சபரீசன் திருநெல்வேலி சென்றார். அங்கே இரவு தங்கிய அவர் மாவட்ட நிர்வாகிகளோடும் அமைச்சர் அனிதா உள்ளிட்டோரோடும் ஆலோசித்தார்.
இப்படி சபரீசன் ரவுண்டு வரும் இடங்களிலெல்லாம் திமுக முக்கியஸ்தர்கள் பண விநியோகம் பற்றி முதல்வர் விதித்திருக்கும் தடை பற்றிய தங்களது புலம்பல்களையும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் இடங்கள், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் இடங்களில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் படலம் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பின் அஷ்டமி, அதன் பின் நவமி என வந்துவிடுவதால் ஏப்ரல் 14 ஆம் தேதியே கரன்சி முகூர்த்தத்தை பெயரளவுக்குத் தொடங்கிவிட்டார்கள். ஓட்டுக்கு 300, சில இடங்களில் ஓட்டுக்கு 500 என்ற அளவில் சித்திரை நாளன்று சில்லரை விநியோகம் தொடங்கிவிட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் சூடுபிடிக்கக் கூடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSKvsMI : தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்… இமாலய ஸ்கோரை செட் செய்த சென்னை!
”ஸ்டெர்லைட் ஆலைக்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக தான் ”: எடப்பாடி குற்றச்சாட்டு!