தேர்தல் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 17) தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், ‘மதுரையில் குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளை நாங்கள் பெறுவோம்’ என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று அதிகாலையே தேர்தலுக்கான பணியை துவங்கியுள்ளார் சு.வெங்கடேசன்.
அதன்படி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலுவின் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”மதுரையில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
இன்று முதல் எங்களது தேர்தல் பணியை துவங்கியுள்ளோம். மதுரையில் குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளை நாங்கள் பெறுவோம். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா