திமுகவில் இணைகிறாரா எஸ்.வி.சேகர்?

அரசியல்

பாஜகவின் அடிப்படை உறுப்பினரும் மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் எஸ்.வி.சேகர்,  நீண்ட நாட்கள் கழித்து இன்று (ஜூன் 11) திமுக மேடையில் ஏறுகிறார்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் தமிழகம் முழுதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தென் மேற்கு மாவட்டச் செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அந்த வரிசையில் இன்று (ஜூன் 11) கலைஞரோடு நான் என்ற தலைப்பில் திமுக பிரமுகர் திண்டுக்கல் லியோனியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரும் பேசுகிறார்கள்.

இந்த அழைப்பிதழ் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் விவாதமாகி வருகிறது.

பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகரை திமுக மேடையில் ஏற்றலாமா என்ற ஒரு தரப்பும், எஸ்.வி.சேகரே கூட திமுகவில் சேர வாய்ப்பிருக்கிறதே என்று இன்னொரு தரப்பும் விவாதித்து வருகிறார்கள்

நாம் இதுகுறித்து மயிலை திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,

“கலைஞரோடு நான் என்ற தலைப்பில் பல பிரமுகர்கள் இந்த தொடர் நிகழ்ச்சியில் இதற்கு முன் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பங்கேற்கிறார்.

மா.செ. வேலுவும் எஸ்.வி.சேகரும் நீண்ட கால நண்பர்கள். அந்த அடிப்படையில் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு எஸ்.வி.சேகரிடம் வேலு கேட்டபோது முதலில் லேசாக தயங்கியிருக்கிறார். ஆனால் கலைஞரைப் பற்றிதானே பேசப் போகிறீர்கள் என்றதும் ஒப்புக் கொண்டுவிட்டார்” என்கிறார்கள்.

6 பேர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

 

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக எஸ்.வி.சேகர் 2006-11 இல் இருந்தபோது முதலமைச்சராக கலைஞர் இருந்தார். அதிமுக சார்பில் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் ஓரிரு வருடங்களிலேயே அக்கட்சியால் ஓரங்கட்டப்பட்டு, பின் நீக்கப்பட்டார்.

அப்போது திமுகவினரோடு இணக்கமாக செயல்பட்டார் சேகர். அப்போதைய முதல்வர் கலைஞர், அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரோடு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். உச்சகட்டமாக திமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டார் எஸ்.வி.சேகர். அப்போதே எஸ்.வி.சேகர் தி.மு.க.வில் சேருவார் என பேசப்பட்டது.

ஆனால் அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து 2010 இல் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மீண்டும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஓராண்டுக்குள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

2011 இல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவிடம், சேகர் மனு அளித்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 2013 இல் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு சேகர் அவரைப் புகழ்ந்து, அகமதாபாத்தில் மோடியை சந்தித்தார்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அப்போதில் இருந்து இப்போது வரை பாஜக காராகவே அறியப்பட்டு வரும் எஸ்.வி.சேகர், இப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று திமுக மேடையேறுகிறார் எஸ்.வி.சேகர். இதனால்  எஸ்.வி.சேகர் திமுகவில் இணையத் தயாராகிறாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் மீண்டும் எழுந்துள்ளது.

திமுக மேடையில் எஸ்.வி.சேகர் கலைஞரைப் பாராட்டி பேசுவதோடு அண்ணாமலையையும் தாக்கிப்  பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

கர்நாடகாவிற்கு நீர்வளத்துறையா? – தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

மத்திய இணையமைச்சராக எல்.முருகன், சுரேஷ் கோபி பொறுப்பேற்றனர்!

 

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *