முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாகவும் துணையாகவும் இருப்பவர் வேலுமணி என்பது யாவரும் அறிந்ததே.
அதேநேரம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்போதைய அதிமுக அமைச்சர்கள் பலரும் சர்ச்சைக்குரிய வகையிலும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் சசிகலா சப்ஜெக்ட் பற்றி பகிரங்கமாக முக்கியத்துவம் கொடுத்து சொன்னதில்லை.
அதேபோல பன்னீருக்கு எதிராக சமீப நாட்களாக உதயகுமார், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் இறங்கியடித்த நிலையிலும் வேலுமணி அந்த அளவுக்கு இறங்கி பன்னீர் பற்றி விமர்சனம் செய்யவில்லை.
இப்படிப்பட்ட பின்னணியில் கோவையைச் சேர்ந்த ஓர் அதிமுக பிரமுகர் நம்மைத் தொடர்புகொண்டு, ‘சார்… இதுநாள் வரைக்கும் வேலுமணி எடப்பாடிக்கு ஆதரவாத்தான் பேசியிருக்காரே தவிர சசிகலாவுக்கு ஆப்போசிட்டா எதுவும் பேசினதில்லீங்… இது உங்களுக்கே தெரியுமில்ல… இப்ப எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல அவரோட ரூம் பக்கம் போய் பாருங்…. இன்னமும் ஓபிஎஸ் படம், இபிஎஸ் படம் சேர்ந்துதான் இருக்குங்.
இதுலேர்ந்து என்ன தெரியுதுனு விசாரிச்சு நீங்க ஒரு நியூஸ் போடோணும் சார்…” என்றார் கொங்குத் தமிழில்.
உடனே இன்று (ஆகஸ்டு 27) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதிக்கு சென்றோம்.
D பிளாக்கில் 10 ஆவது மாடியில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணியின் அறை வாசலுக்கு சென்றோம்.
ஒரு தளத்தில் A, B, C, D, E, F என ஆறு அறைகள் இருக்கும். இதில் 10 ஆவது மாடியில் B அறைதான் வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறையின் வாசலில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி சட்டமன்ற பேரவைக் கொறடா (அ இ அதிமுக), தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கோவை மாவட்டம் என எழுதப்பட்டுள்ளது.
அந்த பெயர்ப் பலகையில் ஜெயலலிதா படம் பெரிதாக வரையப்பட்டு, எம்.ஜி.ஆர். அண்ணா படங்கள் சிறிதாக வரையப்பட்டுள்ளன.
இன்னொரு டாப்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது படங்களும் வரையப்பட்டுள்ளன.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடத்தி அதில் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கினார் எடப்பாடி.
அதன் பின் இருவரும் இணைய வாய்ப்பே இல்லை என்றும் அறிவித்தார் எடப்பாடி. இந்த பொதுக்குழுவை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும் அதை எதிர்த்து மேல் முறையீடு சென்றுள்ளார் எடப்பாடி.
இப்படி அதிமுகவில் பல மாற்றங்கள் நடந்துவிட்ட நிலையிலும் வேலுமணி இன்னமும் தனது சட்டமன்ற விடுதியில் உள்ள பெயர்ப் பலகையில் ஓ.பன்னீர், எடப்பாடி ஆகிய இருவரது படத்தையும் வைத்துள்ளார்.
எனவே இன்றுவரை இரட்டைத் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறாரா வேலுமணி என்று அவரைத் தேடி எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு செல்லும் கோவை அதிமுகவினர் குழம்பியிருக்கிறார்கள்.
எஸ்பி வேலுமணியின் அறையின் முன் இருக்கும் இந்த பெயர்ப் பலகையை இன்று (ஆகஸ்டு 27) புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
“இது அரசு விடுதி. இதில் விருப்பம்போல மாற்றங்களை செய்ய முடியாது” என்று வேலுமணி தரப்பினர் சிலரிடம் கேட்டபோது கூறினார்கள்.
ஆனால் அவர்களே, “பன்னீரையே எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலேர்ந்து நீக்கின பிறகு நினைச்சா இந்த போர்டுலேர்ந்து ஓபிஎஸ் படத்தை மறைச்சிருக்கவும் முடியும். ஏனோ செய்யலை” என்று விளக்கமும் கொடுத்தார்கள்.
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்புக்குப் பின் பல மாஜிக்கள் இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்ற மதில் மேல் பூனைகளாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல… வேலுமணியின் சட்டமன்ற உறுப்பினர் அறை பெயர்ப் பலகையே பல செய்திகளைச் சொல்லுகிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
–வேந்தன்
வெள்ளலூர் பேருந்து நிலையமும் வேலுமணியும்: பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி